ஆஸ்கர் மேடையில் அவமதிப்பு! ஆவணப்பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா வேதனை
ஆஸ்கர் மேடையில் தன்னைப் பேச விடாமல் தடுத்து நிறுத்தியதால் தான் மிகவும் மனம் உடைந்து போனதாக குனீத் மோங்கா கூறியுள்ளார்.
95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் மார்ச் 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது. தமிழ் ஆவணப்படமான 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படமும் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறது.
கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் தமிழகத்தின் பழங்குடி தம்பதியான பொம்மன் மற்றும் பெள்ளியின் பயணத்தைச் சித்தரிக்கிறது. அவர்கள் இரண்டு யானைக் குட்டிகளைப் பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்களுக்கிடையே உள்ள பிரிக்க முடியாத பிணைப்பையும், காலப்போக்கில் அவர்களின் செயல்கள் இயற்கைக்கு எவ்வாறு பங்களித்தன என்பதையும் ஆவணப்படக் குறும்படம் விவரிக்கிறது.
இந்தப் படம் விருது பெற்றிருப்பதைத் தொடர்ந்து தமிழக அரசு பொம்மன் மற்றும் பெள்ளி இருவரையும் அழைத்து பாராட்டியதுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி இருக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தைத் தயாரித்த பெண் தயாரிப்பாளர் குனீத் மோங்கா, ஆஸ்கர் விருது விழா மேடையில் தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசிய மோங்கா ”ஆஸ்கர் விருது விழாவில் என்னை அவமதித்துவிட்டதாக உணர்கிறேன். விருது வழங்கும் விழாவின்போது இயக்குநரை மட்டும்தான் மேடையில் பேச அனுமதித்தார்கள். நான் பேச வந்தபோது இசையை ஒலிக்கச் செய்து என்னை பேசவிடாமல் செய்துவிட்டார்கள். இது கொஞ்சம் கூட சரி அல்ல” என்று கூறியுள்ளார்.
ஆஸ்கர் விருது விழாவில் ஒவ்வொரு விருதுக்கும் ஏற்புரைபக்காக 45 வினாடிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.