நடிகர் சங்கத் தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டது தொடர்பாக, அடுத்தடுத்து நடிகர்கள் தன்னைச் சந்திக்க வருவதால்  பெரும் குழப்பத்துக்கு ஆளான கவர்னர் புரோகித் பன்வாரிலால் ‘உங்க பிரச்சினையில என்னை இழுக்காதீங்க ப்ரதர்ஸ்’ என்று இரு அணிகளையும் சேர்ந்தவர்களையும் நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு அவர்களைத் திருப்பி அனுப்பி வருவதாகத் தகவல்.

வரும் 23ம் தேதி ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த தேர்தல், பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டு அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதில் ஆளும் கட்சியின் தலையீடு இருப்பதாகப் புகார் கூறிய விஷால் அணியினர் நடிகர் கருணாஸ் தலைமையில் அவசர அவசரமாக நேற்று ஆளுநரைச் சந்தித்தனர். ‘யோவ் உங்க நடிகர் சங்கத்துல பிரச்சினைன்னா அதுக்கு நான் என்னய்யா செய்ய முடியும்?’என்று மைண்ட் வாய்சில் மட்டும் பேசிக்கொண்ட கவர்னர் ஆளுக்கொரு லெமன் டீயை மட்டும் கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்.

விஷால் அணி என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு நாமும் அப்படியே செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்  பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் இன்று காலை கவர்னரை சந்தித்தனர். கவர்னரை சந்தித்த பின்  பேட்டி அளித்த அந்த அணியின் அமைப்பாளர் ஐசரி கணேஷ்,‘விஷால் அணியினர் கவர்னரின் நேரத்தை வீண் செய்துவிட்டனர். அவர்கள் கவர்னரை சந்தித்ததால் நாங்களும் சந்தித்தோம். எங்கள் அணி எந்த தவறும் செய்ய வில்லை என்று கூறியுள்ளோம். 

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால்தான் நடிகர் சங்கத்தில் பிரச்சினை ஏற்பட்டது.விஷால் மட்டும் நடிகர் சங்க பிளவுக்கு காரணம் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நாசர், கார்த்தி ஆகியோரும் காரணம் என்றும் கவர்னரிடம் கூறினோம். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அவர், இந்த தேர்தலுக்கும் எனக்கும்  எந்தத்தொடர்பும் கிடையாது. இது தமிழக அரசு சம்மந்தப்பட்டது. இதில் நான் சம்மந்தப்பட்டு பேச ஒன்றுமில்லை என்று ஆளுநர் கூறினார்’என்று இரு அணிகளும் கூமுட்டைத்தனமாக நடந்துகொண்டதை ஐசரி கணேஷ் பப்ளிக்காக போட்டு உடைத்தார்.