விரைவில் வெளிவரவிருக்கும் ‘கொரில்லா’ படத்தில் பட ஹீரோ ஜீவாவை விட அவருடன் நடித்த கொரில்லா அதிக சம்பளம் பெற்றிருப்பதாக அப்படக் குழுவினர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கின்றனர்.

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.அந்த விழாவில்  மற்ற முன்னணி நட்சத்திரங்களை  வயதான காலத்தில் வளர்ந்துவரும் நடிகரான ராகுல் தாத்தா அனைவரையும் கவரும் வகையில் பேசினார். 

"இந்த படத்தில் நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். இந்த காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ஓகோன்னு ஓடணும். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள்.இந்த இயக்குநர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான். சாம்.சி.எஸ் பிரமாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்.

நான் சினிமாவுக்கு வந்து 55 வருடங்கள் ஆகிறது. இனிமே சினிமா நம்மள காப்பாத்தாது என்று முடிவு செய்து மூட்டை முடிச்சுகளைக் கட்டி வைத்துத் தயாராக இருந்தபோது தனுஷ் சார் மூலம் ‘மாரி’ பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் 45 நாட்கள் நடிக்கவைத்து என் ஊர்ப்பயணத்தை ரத்து செய்தார்கள். அடுத்து எனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு இந்த ‘கொரில்லா’ பாஸ்போர்ட் இல்லாமல் இருந்த எனக்கு பாஸ்போர்ட் எடுத்து தாய்லாந்துக்கெல்லாம் அழைத்து சென்றார்கள்’ என்று நெகிழ்கிறார் ராகுல்தாத்தா.

நிகழ்ச்சியின் நடுவே பேசிக்கொண்டிருந்த படத்தின் உதவி இயக்குநர்கள் படம் முழுக்க நடித்திருக்கும் கொரில்லாவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் 2 லட்சம் என்றும்  திருவாளர் கொரில்லாவின் உதவியாளருக்கு தின பேட்டாயிரம் ரூ.25 ஆயிரம் என்றும் ஒரு சுவாரசியத் தகவலைச் சொன்னார்கள். கூட்டிக்கழிச்சுப் பார்த்தா கொரில்லாவோட சம்பளம் ஹீரோ ஜீவாவோட சம்பளத்தை விட அதிகமா வருதே பாஸ்?