பி.ஜே.பி. தலைவர் ஹெச்.ராஜாவை அதிகபட்சமாகக் கலாய்த்தே யு டுபில் பெரும்பணம் சம்பாதித்து வரும் ‘பாவங்கள் பரிதாபங்கள்’ புகழ் கோபியும் சுதாகரும் தங்களது படத்தயாரிப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஒரே வாரத்தில் ஒரு கோடியே பதினேழு லட்சம் நிதி திரட்டியுள்ளனர்.

யுடுப் வலைதளத்தில் சினிமா விமர்சனங்கள், அரசியல் தலைவர்களைக் கலாய்ப்பவர்களுக்கென்று பெரும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். அவர்களில் சினிமா, அரசியல் துறைகளின் ‘பாவங்கள் பரிதாபங்கள்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அரசியல் தலைவர்களில் இவர்களின் கலாய்ப்புக்கு அதிகபட்சம் ஆளாகி சேதாரம் அடைந்திருப்பவர்களில் முக்கியமானவர்கள் மேடம் தமிழிசை, ஹெச்.ராஜா அடுத்து நாம் தமிழர் சீமான்.

இவர்கள் இருவரும் தங்கள் அடுத்த கட்ட நகர்வாக ஒரு திரைப்படம் எடுக்கும் முயற்சியாக கிரவுட் ஃபண்டிங் முறையில் பணம் திரட்ட முயற்சித்து கடந்த 16ம் தேதியன்று ஒரு வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோவுக்கு வெறும் லைக்குகள் மட்டுமே குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் சுமார் ஒரு கோடியே பதினேழு லட்சம் வசூலாகியுள்ளது. இப்பணம் பத்தொன்பதினாயிரம் பேர்கள் மூலம் வசூலாகியுள்ளது.

திரையுலகில் அவ்வப்போது இந்த கிரவுட் ஃபண்டிங் முறையில் படங்கள் தயாரிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றிருக்கும்’நெடுநல் வாடை’ படம் கூட இயக்குநரின் 50 நண்பர்களின் கூட்டு முயற்சியில் உருவான படமே. ஆனால் ‘பாவங்கள் பரிதாபங்கள்’ கோபி,சுதாகருக்குக் கிடைத்திருப்பது முகம் தெரியாத ரசிகர்களின் பணம்.