’அறம்’ படம் ரீலீஸாகி சுமார் ஒருவருடம் ஆன நிலையில், நடுவில் ஒன்றிரண்டு படங்களில் கமிட் ஆகி அப்புறம் டிராப் ஆகி, தற்போது ஒரே நேரத்தில் தனது இரு படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கோபி நயினார். அதில் ஒன்று ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் சிறுபட்ஜெட் படம். மற்றொன்று பழங்குடி இனத்தை சேர்ந்த சுதந்திர போராளி பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை கதை. 

’இரண்டாவது  படத்தின் கதையை இன்னும் முழுவதுமாக முடிக்காததால் அதன் பட்ஜெட் குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. ஆனால் கதையின் காலகட்டத்துக்காக 100 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்கவேண்டியிருப்பதால், இந்திய சினிமாவின் பெரும்பட்ஜெட் படங்களுள் ஒன்றாக அது இருக்கும்’ என்கிறார் கோபி. 

வட இந்தியாவைச் சேர்ந்த பிர்ஸா முண்டா பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் மட்டும் இல்லாமல், பழங்குடி இன மக்களுக்காக போராடி உயிர் நீத்தவர்.

 

25 வயது வரைக்குமே உயிரோடு வாழ்ந்த இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது உலகம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களை இம்மண்ணில் இருந்து விரட்ட மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டியவர் முண்டா. இக்கதையின் நாயகனாக நடிக்க முன்னணி நடிகர்களுக்கு கதைச் சுருக்கத்தை சொல்ல ஆரம்பித்திருக்கும் கோபி, ஜெய் படத்தை அடுத்த ஜூனுக்குள் முடித்துவிட்டு, பிர்ஸா முண்டாவின் கதையைத் தொடங்கவிருக்கிறாராம்.