அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் தல அஜித்தின் வலிமை மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களின் ஷூட்டிங் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பாரபட்சம் பார்க்காமல் பாமரர் முதல் கோடீஸ்வரர்கள் வரை கொரோனாவின் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு திரையுலகமும் விதி விலக்கு அல்ல. உலகிலேயே மிகப்பெரியதும், பல்லாயிரம் கோடி டாலர் வர்த்தகம் நடைபெறுவதுமான ஹாலிவுட் திரையுலகமே கொரோனா முன்பு சரண்டர் ஆகிவிட்டது. ஹாலிவுட் பிரபல நடிகர், நடிகைகள் சிலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் சிக்கல் இன்னும் முற்றிவருகிறது.
இந்தியாவில் இதுவரை 110 நபர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக பிற மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பல மொழி படங்களின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கொல்கத்தா மற்றும் புனேயில் நடைபெறவிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “அண்ணாத்த” பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் தல அஜித்தின் “வலிமை” மற்றும் சிம்புவின் “மாநாடு” ஆகிய படங்களின் ஷூட்டிங் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோன்று மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” படத்தின், தாய்லாந்து ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஜோதிகா நடிப்பில் வெளியாக உள்ள “பொன்மகள் வந்தாள்” படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா பீதியால் தளபதி விஜய்யின் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழா கூட ரசிகர்கள் இல்லாமல், நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்டது. இதனை கவனத்தில் கொண்டு “பொன்மகள் வந்தாள்” படத்திற்கான ஆடியோ லான்சை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சோசியல் மீடியாவில் பாடல்களை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 27ம் தேதி படத்தை வெளியிடவிருந்த நிலையில், ரிலீஸ் தேதியும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.