சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து "இன்று நேற்று நாளை"  படத்தின் இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 

ஆரம்பத்தில் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்த நிலையில், கடும் நிதி நெருக்கடியால் படத்தை கைவிடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் கைகொடுக்க முன் வந்தது. தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தயாரித்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ், அதனைத் தொடர்ந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது. 

சமீபத்தில்  வெளியான அயலான் படத்தின் மோஷன் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் அயலான் படம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் ஒன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த படத்தில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் 3 கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ரஜினிமுருகன்,ரெமோ படங்களில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். 

எனினும் முழு நீள படத்தில் இரட்டை வேடங்களில் அவர் நடித்ததில்லை. அதுவும் 3 வேடங்களில் நடிக்கவிருப்பதால், சிவகார்த்திகேயனைக் காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.