தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்துள்ளனர்.

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் நடத்தப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனாவும், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை மோகன் லாலும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கானும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக இதில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக மும்பையில் உள்ள கூர்கான் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த செட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீவிபத்தில் பிக்பாஸ் செட்டில் இருந்த பிளைவுட், எலெக்ட்ரிக் வயர்கள், மர சாமான்கள் ஆகியவை தீயில் கருகியதாக கூறப்படுகிறது. அதிஷ்டவசமாக இந்த தீவிபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15-வது சீசன் கடந்த ஜனவரி 30-ந் தேதி உடன் நிறைவடைந்தது. அதன்பின் அந்த செட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டபோது தான் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.