பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனின் அனுமாஷ்யம், தெய்வீகம், திகில் கலந்த கதைகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் எழுதிய ருத்ர வீணை, சிவமயம், விடாது கருப்பு, மர்ம தேசம், மாய வேட்டை, என் பெயர் ரங்கநாயகி போன்ற டி.வி. சீரியல்கள் பட்டையைக் கிளப்பின. அதன் மூலம் ஏராளமான இல்லத்தரசிகளும் இந்திரா செளந்தர்ராஜனுக்கு ஃபேன்ஸாக மாறினர். 

முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதில் எல்லாம் விருப்பம் இல்லாத இந்திரா செளந்தர்ராஜன், நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படத்தை கண்டு ரசித்துள்ளார். 70 வயது ரஜினிகாந்தின் அதிரடி ஆக்‌ஷன், மாஸ் ஸ்டைலை பார்த்து பிரம்மித்து போன இந்திரா செளந்தர்ராஜன். அப்படம் குறித்த தனது விமர்சனத்தை எழுத்தாளருக்கே உரிய அழகிய நடையில், நெற்றி பொட்டில் அடித்தது போல் பதிவு செய்துள்ளார்.

"தர்பார்" குறித்து இந்திரா செளந்தர் ராஜன் தெரிவித்துள்ள கருத்து இதோ.... 

"தர்பார்" இந்த முதல் நாள் படம் பார்க்கும் காய்ச்சல் எல்லாம் எனக்கு கிடையாது.ஆனாலும் என் சிவமயம் தொடரில் நடித்த எனக்கு பரிச்சயமான நிவேதா தாமஸ் பிரமாதப்படுத்தியிருக்கிறாள் என்று கேள்வி பட்டு ஒரு ஆர்வம் துளிர்த்தது. சேலம் சென்ற இடத்தில் காணும் வாய்ப்பும் வாய்த்தது.பலவிதமான விமர்சனங்கள். முதல் பாதி ஜிவ், மறுபாதி ஜவ் என்பது அதில் பலர் சொன்னது. தியேட்டரில் கூட்ட மேயில்லை , படம் ஒரு தரும டப்பா என்றும் சிலர் முகநூலில் பதிவிட்டிருந்தனர். நான் Second Show போயிருந்தேன். எங்க ஊரில் (மதுரை) அழகரை பார்க்க வருவது போல் அப்படி ஒரு கூட்டம். 

மிக விரும்பி ரசித்த "சில்லுக்கருப்பட்டி" திரைப்படத்தை ஒரு 30 பேரோடு மட்டுமே பார்த்த அனுபவம் ஞாபகத்தில் வந்து ,70 வயது கிழ ரஜினியின் ஈர்ப்பை காட்டி பிரமிக்க வைத்தது. ஒரே கோலாகலம். சினிமா ஐ.சி.யுவில் இருக்கும் இவ்வேளையில் நான் மட்டுமே ஆக்சிஜன் என்று ரஜினி புரிந்த அதகளமே "தர்பார்". சத்தியமாக இது பெரும் ஆசீர்வாதம். அறிவுக்கும், அதன் லாஜிக்குகளுக்கும் அப்பார்பட்ட பெரும் புதிர். இனி என் பார்வையில் "தர்பார்".

பெயரில் மட்டுமல்ல, நிஜமாலுமே தர்பார் தான். துப்பாக்கிக்கு பிறகு முருகதாசுக்கு ஒரு குளோபல் பிரிஸ்க் ஸ்க்ரிப்ட் வாய்த்துள்ளது. முதல் பாதி, இரண்டாம் பாதி என்று பாகுபடுத்திட தேவையே இல்லை. எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது.ரஜினியை சிரமப்படுத்தாமல் சண்டைக் காட்சிகளை எடுக்க முருகதாசுக்கு தெரிந்துள்ளது. நூறு பேர் அடிக்க வந்தாலும் ஒவ்வொருவராக வந்து மோதுவது தான் இந்திய சினிமாக்களின் ஹீரோயிசம் , அந்த நூறு பேரில் ஒருவனோடு கூட உண்மையில் மோத முடியாது. அப்புறம் புத்தூர் கட்டு உத்தரவாதமாகிவிடும். ஆனால் நம்ம ஹீரோக்கள் தான் பரம்பொருளின் பிம்பங்களாயிற்றே ?- எனவே எப்படி புராணமாயங்களை நம்பி ஏற்கிறோமோ, அதே Fallow Up தான் இங்கும். 

இந்த சண்டைக் காட்சி இமாலயப் புளுகுகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் நல்ல கன்டென்ட், நல்ல ட்விஸ்ட், நல்ல மெசேஜ் , நல்ல எமோஷன். இந்த மாதிரி ஜாலி வாலாவில் ஒரு ஜாலியன் வாலா எமோஷன் என்பது அதிசயம். முருகதாஸ் புத்திசாலி. ரஜினியை முட்டுக் கொடுத்து தர்பார் மண்டபம் கட்டி அதை நல்ல விலைக்கு விற்றும் விட்டார்.one man army யாக ரஜினியும் 70 வயதில் தாங்கி நின்று சரித்திரம் படைத்து விட்டார்.