ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சிர்வேல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. வெங்கடேஷ் நடித்த பிரம்மபுத்ருடு என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர், பாலகிருஷ்ணாவின் சமரசிம்மா ரெட்டி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். தெலுங்கில் தனது வித்தியாசமான நடிப்பால் முன்னணி நடிகர்களுக்கு எல்லாமே வில்லன் இவர் தான் என்பது மாறிப்போனார். 

தமிழில் தல அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் ஆறு, தர்மபுரி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ஜெயபிரகாஷ் ரெட்டி, தனுஷின் உத்தம வில்லன் படத்தில் காமெடி கலந்த வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கடைசியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான  சரிலேரு நீக்கெவ்வரு என்ற படத்தில் நடித்திருந்தார். 

கொரோனா லாக்டவுன் காலத்தில் ஷூட்டிங் இல்லாமல் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் நிலையில், ஜெயபிரகாஷ் ரெட்டி அவருடைய சொந்த ஊரான கர்னூலில் வசித்து வந்தார். 74 வயதான இவர் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு திடீரென காலமானார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர் பலரும் ஜெயபிரகாஷ் ரெட்டி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.