உலக மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா தொற்றுக்கு தொழிலதிபர், அரசியல்வாதி, திரைப்பிரபலம், விளையாட்டு வீரர் என யாருமே தப்பவில்லை. அதிலும் குறிப்பாக திரைத்துறையினரின் பாடும் மிகப்பெரிய திண்டாட்டமாக மாறியுள்ளது. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படி அபிஷேக் பச்சன் நடித்த வெப் சீரிஸ் ஒன்றின் டப்பிங் பணிக்கு சென்றதால் தான் அவருக்கு தொற்று ஏற்பட்டதாகவும், அவரைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யாவுக்கும் தொற்று பரவியதாகவும் கூறப்படுகிறது. 

திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபல பாடகி ஒருவர் தனக்கு கொரோனா தொற்று பரவிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். தெலுங்கு மொழியில் பிரபலமானவர் பாடகி ஸ்வேதா, தமிழில் பாப் இசை வெஷனில் இவர் பாடிய இஞ்சி இடுப்பழகா பாடல் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் ஸ்வேதாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த பதிவில் “நேற்று மிகவும் மோசமான நாள். கொஞ்சம் உடல்வலி இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கும் கணவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வீட்டில் பாதுகாப்பாக தான் இருந்தோம். சில நாட்களுக்கு முன்பு வீட்டின் லைட் சரிசெய்வதற்கு ஒருவரை அழைத்திருந்தோம். அவரக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் இருந்து எனக்கும் என் கணவருக்கும் கொரோனா வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எப்படி இருப்பினும் தற்போது நாங்கள்
வீட்டில் தனிமைப்படுத்தி பாதுகாப்பாக இருக்கிறோம். கூடிய சீக்கிரத்தில் கொரோனாவை வென்று விடுவோம்” என மன உறுதியுடன் தெரிவித்துள்ளார்.