பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா மரணம்... சோகத்தில் திரைத்துறையினர்...!
தமிழ் நடிகரும் , இசையமைப்பாளருமான டி எஸ் ராகவேந்திரா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்
தமிழ் நடிகரும் , இசையமைப்பாளருமான டி எஸ் ராகவேந்திரா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 75 வயதான அவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தை அறிமுகமானவர். இவர் சிந்து பைரவி , சின்ன தம்பி , பெரிய தம்பி , அண்ணா நகர் முதல் தெரு , விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
உயிர், படிக்காத பாடம், யாக சாலை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னணி பாடகியான சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட டி.எஸ்.ராகவேந்திராவிற்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். போடா போடா புண்ணாக்கு, திருப்பாச்சி அருவாள, லாலா நந்தலால உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி கல்பனா, ராகவேந்திராவுடைய மகள்களில் ஒருவர் ஆவார்.
அப்பா கேரக்டர் என்றாலே டி.எஸ்.ராகவேந்திரா தான் என்று சொல்லும் அளவிற்கு அம்பிகா முதல் ரேவதி வரை முன்னணி நடிகைகள் பலருடனும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நீதிபதி, கோவில் குருக்கள், போலீஸ் உயர் அதிகாரி என ஏராளமான கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்து புகழ்பெற்றவர். இவரது இறுதிச்சடங்கு கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் 2 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது . டி.எஸ்.ராகவேந்திராவின் திடீர் மறைவு திரைத்துறையினர் இடையே மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.