2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் திரையுலகின் திறமையான நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என பலரையும் அடுத்தடுத்து இழந்து வருவது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே உலுக்கியது. மற்றொருபுறம் கொரோனா லாக்டவுனால் திரையுலகம் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இதனால் எப்போது புது வருடம் பிறக்கும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

2020ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மற்றொரு கோலிவுட் நடிகரின் மறைவு அனைவரையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் அருண் அலெக்ஸாண்டர் (48). சென்னையைச் சேர்ந்த அருண் அலெக்ஸாண்டர் கடந்த 10 வருடங்களாக சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். 

மாநகரம், கோலமாவு கோகிலா, பிகில், கைதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று அருண் அலெக்ஸாண்டர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள், டப்பிங் கலைஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.