பாலா இயக்கிய வர்மாவை தூக்கிப்போட்டுவிட்டு புதிய வர்மாவை உருவாக்கப்போவதாக அறிவித்திருந்த பட நிறுவனம் படத்துக்கு ஆதித்யா வர்மா’ என்று பெயர் சூட்டியுள்ளது. இத்தகவலை அந்நிறுவனம் சற்றுமுன்னர் அறிவித்தது.

‘வர்மா’விலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட இயக்குநர் பாலாவும் தனது அடுத்த படத்தைத் துரிதமாக தொடங்க களம் இறங்கியுள்ள நிலையில் நாயகி, ஒளிப்பதிவாளர் என்று தவணை முறையில் தனது டீமை அறிவித்துவந்த இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சில நிமிடங்களுக்கு முன் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வர்மா தயாரிப்பு நிறுவனம் பாலாவை படத்திலிருந்து தூக்கியபோது வீராப்பாக எங்களது புதிய வர்மா ஜூனில் மிக நேர்த்தியான படமாக ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தது. டெக்னீஷியன்கள், மற்ற நட்சத்திரங்கள் அறிவிப்பே இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், படத்தின் தலைப்பை அறிவிக்கவே இவ்வளவு தாமதம் ஆகியிருப்பதால் அட்லீஸ்ட் ஆகஸ்டுக்கு முன்பு படம் வெளியாக வாய்ப்பில்லை.

தமிழ்ப்படத்தை இயக்க தெலுங்கு ஒரிஜினல் இயக்குநர் சந்தீப் வங்காவையே தயாரிப்பாளர் கேட்டுக்கொண்ட நிலையில் அவர் இந்திப்படம் இயக்குவதில் பிசியாக இருப்பதால் அவரிடம்  உதவி இயக்குநராகப் பணியாற்றியகிரிஷய்யா என்பவர்  தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று நாம் நான்கு நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்தபடி அவரே இயக்குநராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் கதாநாயகி அறிவிப்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட இயக்குநருக்கு தரவில்லை.