உலகின் தலைசிறந்த ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞர்களுல் ஒருவரான ஆனந்தன் சிவமணி என்கிற ட்ரம்ஸ் சிவமணி, தனக்குக் கிடைத்திருக்கும் பதம்ஸ்ரீ விருதை தனது தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

தனது 11 வயதில் டிரம்ஸ் வாசிக்கத்துவங்கிய சிவமணிக்கு தற்போது 60 வயது. இளையராஜாவின் இசைக்குழுவில் டிரம்ஸ் வாசிக்கத்துவங்கிய பிறகு உலகப்புகழ்பெற்ற கலைஞரானார். பின்னர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானபின்னர், அவரிடமும் பணியாற்றி புகழின் உச்சிக்கே சென்றார். மற்ற வாத்தியக்கருவிகளின் ஒத்தாசை இல்லாமல் தனி மனிதராக பல மணிநேரம் டிரம்ஸ் வாசித்து வியப்பில் ஆழ்த்தக்கூடிய வல்லமை கொண்டவர் சிவமணி. உலகில் இவரது கச்சேரிகள் நடக்காத இடமே இல்லை என்பது சிவமணியின் இன்னொரு சிறப்பு.

’அரிமா நம்பி’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருந்த, சுமார் 50 வருடகாலமாக சற்றும் ஓய்வெடுக்காமல் சுழன்றடித்த இசைப்புயல் சிவமணிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர்,’ விருதுகளும் வேறு எந்த பிரதிபலன்களும் எதிர்பாராமல் இசைத்துறைக்கு நான் 45 ஆண்டு காலம் செய்த சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நினைத்துக்கொள்கிறேன்.  இதற்காக முதலில் என் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு என் தாயாருக்கு இந்த பத்ம ஸ்ரீயை சமர்ப்பிக்கிறேன்’ என்கிறார் நெகிழ்வோடு.