ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு வராமல் இருப்பதில் அகில உலக அளவில் பல ரெகார்டுகள் வைத்திருக்கும் சிம்பு ‘மாநாடு’படத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அடுத்து சொந்தத் தயாரிப்பில் ‘மகா மாநாடு’ அறிவித்திருக்கும் நிலையில் மீண்டும் கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார். இதையொட்டி ஏற்கனவே டிராப் ஆன அவரது படங்களின் லிஸ்டை ஆளாளுக்கு தூசு தட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
கால்ஷீட் சொதப்புவதோ அல்லது துவங்கிய படத்தை, பூஜை போட்டவுடன், கால்வாசியில் பாதியில் முக்கால்வாசி முடிந்த சிம்பு கைவிட்டுவிட்டுக் காலாட்டிக்கொண்டுப் போவது ஒன்றும் அவருக்குப் புதுசல்ல. சொல்லப்போனால் ‘வல்லவன்’,’மன்மதன்’காலங்களிலிருந்து ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன். ஆனா ஷூட்டிங்குக்கு மட்டும் ஒழுங்கா வரமாட்டேன்’ காலம் வரை அவரது இயல்பு இதுதான். அவர் பிரச்சினை செய்யாமல் முடித்துக்கொடுத்த ஒரே படம் அது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ஒன்று மட்டுமே என்பதுதான் உண்மை.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியாகி தோல்வியடைந்த சமயத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்து படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வராதது குறித்தும் தனது வீட்டின் பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசியதாகவும் சொன்ன பிறகு சிம்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஹாலிவுட் தரத்தில்  ஒரு படம்' எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் பலர் சிலிர்த்துப்போய் சில்லரையை விட்டு எறிந்து கொண்டாடினார்கள். ஆனால், அந்தப் படத்தைப் பற்றி அதற்குப் பிறகு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 'வல்லவன்' வெளியாகி ஓரளவு வெற்றி பெற, சிம்பு அடுத்து 'கெட்டவன்' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் பாடல்கள் கூட இணையத்தில் லீக்காகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பிரபல தொகுப்பாளராகவும் மாடலாகவும் இருந்த லேகா சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு லேகா சிம்புவை குறை சொல்லி தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
 
'நியூ' படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா சிம்புவையும் அசினையும் வைத்தும் 'ஏசி' என்றொரு படத்தை எடுக்க இருந்தார். ஆனால், போட்டோஷூட்டுடன் படம் ட்ராப் ஆனது. 'வாலிபன்', நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு சிம்பு இயக்கி நடிப்பதாக இருந்த படம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு ஒரு பாடலும் வெளியாகி இருந்தது. ஆனால், இந்தப் படமும் டேக்-ஆஃப் ஆகவில்லை. அடுத்து 'வேட்டை' படத்தில் ஆர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிம்புவைத்தான் தேர்வு செய்தார் லிங்குசாமி ஆனால், படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு வராமல் காலதாமதம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் பிரச்சனைவர சிம்பு ‘வேட்டை மன்னன்’ என்னும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ஷூட்டிங்கை தொடங்கினார்.'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சனின் முதல் படம் 'வேட்டை மன்னன்'. இந்தப் படத்தின் முதல் பாதி ஷூட்டிங் மட்டும் முடிவடைந்து இணையத்தில் டீஸரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், படம் ட்ராப் ஆகிவிட்டது. 

 கான்... செல்வராகவன் பல தடைகளுக்குப் பின்னர் முதன் முதலில் சிம்புவை வைத்து படம் எடுப்பதாக அறிவித்து, போஸ்டரும் வெளியானது. ஆனால், காரணம் தெரியாமலேயே இந்தப் படமும் ட்ராப்பானது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான படம் 'கோ'. இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக கமிட்டாகியிருந்தவர் சிம்புதான். நாயகியை மாற்ற வேண்டும் என்று சொல்லியதால் இயக்குனர் நாயகனை மாற்றிவிட்டதாக சொல்லப்பட்டது. தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறன், முதலில் சிம்புவை வைத்துதான் 'வடசென்னை' இயக்குவதாக செய்திகள் வெளியாகின. பின்னர், அந்தப் படத்தில் தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிபெற்றது. சிம்பு ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட 'மாநாடு' படமும் இந்த வரிசையில் சேர்ந்துவிட்டது. இதற்குப் போட்டியாக சிம்பு 'மகாமாநாடு' படத்தை அறிவித்திருக்கிறார். இப்படத்திலும் டைரக்டர் சொல்படி நடிகர் சிம்பு கேட்கமாட்டார் என்பதால் இப்படமும் டிராப் ஆகவே வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.