*சிவகார்த்திகேயனை வைத்து மித்ரன் எடுத்த ‘ஹீரோ’ படம் வந்த வேகத்திலேயே ஜீரோவாகிவிட்டது. இந்தப் படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி, அது உறுதியும் ஆனதால் இயக்குநர் மித்ரனின் பெயருக்கு பெத்த டேமேஜ். இந்த நிலையில் ஹீரோ ரிலீஸுக்கு முன்பே, கார்த்தி நடிக்க, இவர் இயக்க ஒரு படம் ஓ.கே.வானது. ஆனால் மித்ரனின் பெயர் இப்போது சிக்கலாகிவிட்டதால் கார்த்தி அந்தப் படத்தை தொடர்வாரா? என்று ஒரு டவுட் கிளம்பியது. ஆனால் இது நாள் வரையில் கார்த்தியிடமிருந்து எந்த நெகடீவ் ரியாக்‌ஷனும் இல்லையாம். 

*கோடிகோடியாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, தான் நடிக்கும் படத்தின் ப்ரமோஷன்களுக்கு வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் நயன். அவருக்கு லகான் போட பெரிய தயாரிப்பாளர்கள் முயன்றும் பப்பு வேகவில்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் பற்றி நயனிடம் யாரெல்லாமோ எடுத்துச் சொல்லியும் வேலைக்கு ஆகவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நயனை, காய்ச்சி எடுத்துவிட்டனர் ரசிகர்கள். ‘இதுக்கு மட்டும் வர முடியுதோ?’ என்று அவர்கள் கேட்ட கேள்வி, நயனை ரொம்பவே யோசிக்கவும், வருந்தவும் வைத்துவிட்டதாம். 

*விஜய்யின் படங்களை சுவடே இல்லாமல் அவரது உதவியாளர்களோ, நெருங்கிய உறவினர்களோ தயாரிப்பது பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இப்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் கூட அப்படித்தான். விஜய்யின் உறவினர் பிரிட்டோதான் இதன்  முதல் தயாரிப்பாளர். ஆனால் ஏதோ ஒரு பிரச்னையால் சமீபத்தில் அவருக்கு கல்தா கொடுத்துவிட்டு நீக்கப்பட்டவர், பட விளம்பரங்களில் கூட பெயர் போடப்படாத அளவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டார். பின் என்ன நினைத்தாரோ தெரியலை, அவரது வீட்டு சுபகாரியம் ஒன்றுக்கு சென்று, பல மணி நேரம் அங்கே இருந்து, புண் பட்ட நெஞ்சுக்கு மருந்து போட்டிருக்கிறார் தளபதி விஜய். 

*ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் ஒரே நெருக்கத்தில் வைத்து கோலோச்சும் கோலிவுட் ராசாக்கள் ரொம்ப குறைவு. அந்த ஒரு சிலரில் ஒருவர்தான் ஐசரி கணேஷ். இவர் சமீபத்தில் தயாரித்த ‘கோமாளி’ செம்ம ஹிட். ஆனால் அதில் ரஜினியை உரசுவது போல் வைத்திருந்த டயலாக்கானது உண்மையிலேயே ரஜினியை உரசிவிட்டது. ஆனாலும் நட்புக்கு சேதாரமில்லை. 
இந்த நிலையில் மிர்ச்சி சிவா நடிக்க, இவர் தயாரித்து ரெடியாகியிருக்கும் ‘சுமோ’ படத்தை தர்பார் ரிலீஸாகையில் இறக்கிவிட நினைத்தாராம் ஐசரி. ஆனால் ‘சூர காத்துல காணாம போயிடபோவுது’ என்று நண்பர்கள் தடுத்துவிட்டனர். ஆனால் தர்பார் படத்தின் நெகடீவ் விஷயங்களால் இப்போது தியேட்டர்கள் அல்லாடிக் கிடக்கின்றன. இப்போது  காமெடி படமான சுமோ வந்திருந்தால் நிச்சயம் ஹிட்டாகி இருக்குமாம். ஐசரியிடம், ஐ ஆம் ஸாரி! என்கிறார்கள் அந்த தடுத்த நண்பர்கள்.

*தமிழ் சினிமாவானது என்னதான் கதையமைப்பு, திரைக்கதை லாவகம், டெக்னாலஜி ஆகியவற்றில் வளர்ந்துவிட்டது! என்று கூறப்பட்டாலும், இன்னமும் ஹீரோக்களை நம்பித்தான்  பிஸ்னஸ் நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஹீரோக்களும் ஒவ்வொரு படத்துக்கும் தங்களின் சம்பளத்தை எக்கு தப்பாக ஏற்றிக்கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் சம்பளம் லீக் ஆகி இருக்கிறது. யெஸ்!  எண்பது கோடியாம். இதற்கு ஓ.கே. சொல்லி, லம்பான ஒரு அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து, தளபதியை புக் பண்ணிவிட்டது சேனல் நிறுவனம் ஒன்று. 

-விஷ்ணுப்ரியா