நேற்று முன் தினம் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பத்தாவது ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் புர்கா அணிந்துகொண்டே மேடையேறியது பெரும் சர்ச்சையாக மாறி வைரலாகி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக இதில் சிலர் இளையராஜாவின் பெயரையும் வம்பிக்கு இழுத்துவிட்டிருக்கிறார்கள்.

'தன் மகன் வேறு மதம் மாறுவதாகச் சொன்ன போது அனுமதித்த ராஜா எங்கே? தன் மகளுக்கு புர்கா போட்டு மேடையில் நிறுத்திய ரகுமான் எங்கே?’ என்று ஒருவர் கிளப்பியுள்ள சர்ச்சையில், ‘ மகள் புர்கா போட மாட்டேன்னு சொன்னதை மீறி ரஹ்மான் மாட்டிவிட்டாரா? என்ற தொனொயில் ரஹ்மானுக்கு ஆதரவாக பல பதிவுகள் இருக்க, கீதப்ரியன் என்பவர் அப்பதிவுக்குக் கீழே மிக தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ரஹ்மான் அவரது மூத்த மகள் கதீஜாவை நிகாப் (பர்தா) அணிய வைத்து மேடையில் தோன்ற வைத்தார் என்ற புரிதல் இல்லாத உளறல்களை இன்று பார்த்தேன். ரஹ்மானின் இரு மகள்களில் மூத்தவர் கதீஜா மட்டுமே நிகாப் (niqab)வகை பர்தாவை விரும்பி அணிகிறார்.

அவர் பர்தாவில் முகத்தைக் காட்டக்கூடிய வகைகளான chador, tuding,DOA gaung,shayla,khimar,hijab,esarp என்பனவற்றில் கண்களை மட்டுமே காட்டும் niqab வகையைத் தேர்ந்து எடுத்துள்ளார், முழுக்க அது அவரின் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.

கதீஜாவின் தங்கை ரஹீமா பர்தா அணியாமல் மாடர்னாகவே வலம் வருகிறார்(பார்க்க படம் ), ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவும் சாதாரணமான முகபடம் மட்டும் அணிகிறார், மகன் அமீன் நவநாகரீக இளைஞனாகவே இருக்கிறார். ரஹ்மானை விமர்சிக்க இந்த பர்தா விஷயத்தை ஏன் சற்றும் புரிதல் இல்லாமல் கையில் எடுத்தனர் எனப் புரியவில்லை.

இது முழுக்க கதீஜா ரஹ்மானின் விருப்பம் மற்றும் நம்பிக்கை சார்ந்தது.இங்கே அமீரகத்தில் மெத்த படித்த பல நாட்டுப் பெண்கள் ஹிஜாப் அணிவதை மிகவும் கௌரவமாக பெருமையுடன் அணிகின்றனர். அந்த பாரம்பர்யத்தை விட்டே கொடுப்பதில்லை.இதில் பெண்ணடிமை என்பது பற்றியெல்லாம் பேச்சேயில்லை. இது முழுக்க முழுக்க தவறான புரிதலினால் எழுந்த சர்ச்சை என்பதனால் இந்த பதிவு இடவேண்டியதாயிற்று’ என்கிறார் அவர்.