*டாக்டர் ராமதாஸ் கொளுத்திப்போட்ட முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எஸ்.சி. ஆணையத்தில் பொய்யான தகவல்களை அளித்து வருகிறார்கள். அங்கே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, வாக்கு சாவடி மையம் இருந்ததற்கான சான்றுகளும் விரைவில் வெளிவரும். ஆளும் அரசு தி.மு.க.வுக்கு இந்த விஷயத்தில் எந்த உதவியும் செய்யக்கூடாது என்பதுதான் என் கோரிக்கை.
-தடா பெரியசாமி (பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர்)

*என் கடமைகளை செய்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்கவே முடியாது. கோல்கட்டா பல்கலை பட்டமளிப்பு விழாவில் நடந்த நிகழ்வுகளினால் நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். இது ஒரு இருண்ட காலம். பல்கலை வேந்தரான என்னை, கட்டுக்கடங்காத கும்பலொன்று வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. 
- ஜக்தீப் தன்கர் (மேற்குவங்க கவர்னர்)

*தமிழக முதல்வராக இ.பி.எஸ். இருப்பதை தி.மு.க. ஸ்டாலினால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவருக்கு பதவி வெறி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால்தான் முதல்வரை தரம் குறைந்து விமர்சிக்கிறார். மத்திய அரசின் வல்லுநர்கள், உயரதிகாரிகள் நம் மாநிலத்தின் செயல்பாட்டை ஆராய்ந்து விருது கொடுத்துள்ளனர். இது ஸ்டாலினுக்கு வழங்கியது போல் தனி நபர் வழங்கிய விருது அல்ல. 
-செல்லூர் ராஜூ (கூட்டுறவுத்துறை அமைச்சர்)

*பயங்கரவாதத்தை தன் தேசிய கொள்கையாக வைத்துள்ள நாடுகளுடனான நம் வெளியுறவு கொள்கையை தெளிவு படுத்தியுள்ளோம். இனி பயங்கரவாதத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். உறுதியான நடவடிக்கை எடுப்போம். 
-முரளிதரன் (வெளியுறவுத் துறை அமைச்சர்)

*டில்லி மக்களுக்காக நான் பலவற்றை இழந்துள்ளேன். அரசியலுக்கு வந்தபின், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல சங்கடங்களை சந்தித்துள்ளேன். ஆனால் இதற்கு பிரதிபலனாக என்னை பா.ஜ.க. ‘தீவிரவாதி’ என கூறியுள்ளது. இது மிகவும் வருத்தம் தருகிறது. 
-அரவிந்த் கெஜ்ரிவால் (டில்லி முதல்வர்)

*பிரதமர் மோடி மற்றும் அவரது பொருளாதார ஆலோசகர்கள் நாட்டி பொருளாதாரத்தை  புரட்டிப் போட்டுள்ளனர். இதனால் பொருளாதார மந்த நிலை, சரிவு, சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. எனவே இப்போது அடுத்து என்ன செய்வது? என தெரியாமல் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் குழப்பத்தில் உள்ளனர். 
-ராகுல் காந்தி (காங்கிரஸ் மாஜி தலைவர்)

*கமல்ஹாசன், குஷ்பூ, த்ரிஷா, ரம்யாகிருஷ்ணன்  போன்றவர்களும், சில முக்கிய அரசியல் புள்ளிகளும் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், கடற்கரை ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறி பங்களாக்களை கட்டியுள்ளனர். பார்ட்டி, கூத்துக்காக இந்த பங்களாக்களைப் பயன்படுத்துகிறார்கள் இவர்கள். அதில் சேரும் குப்பைகளை கடலிலேயே கொட்டி, நாசம் செய்கிறார்கள். 
-முருகையா (கரிக்காட்டுக்குப்பம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்)


*கருணாநிதி, ஸ்டாலின்னு தி.மு.க.வின் தலைமை குடும்பம் அரசியலை கமர்ஷியலாக மட்டும்தான் பண்ணுவாங்க. ஆட்சியில் இருக்கும்போது மக்களுக்காக ஒரு திட்டத்தை அறிவித்தாலுங்கூட அதில் நமக்கு என்ன லாபம் வரும், கமிஷன் வருமுன்னு கணக்கு போட்டு விஞ்ஞான ரீதியில் காசை அள்ளிக் கொட்டிய குடும்பம் அது. அந்த பரம்பரையில் வந்திருக்கும் உதயநிதியும் இதற்கு விதிவிலக்காக இருக்க மாட்டார்!
- சிங்கை ராமச்சந்திரன் (அ.தி.மு.க. ஐ.டி.விங் மாநில செயலாளர்)

*தலைவர் மற்றும் அம்மாவால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. இயக்கம் வெற்றி நடை  போட வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம். அதுக்காகத்தானுங்க, கழகமானது அதன் சட்டவிதிகளின் படி நடக்க வேண்டும்னு நான் போராடுறேன். நானே உண்மையான அ.தி.மு.க. அப்படின்னு ஒரு சமயத்துலேயும் நான் சொன்னதில்லை. 
- கே.சி.பழனிசாமி (மாஜி எம்.பி. - கைதான நிலையில்)

*’சம்பவம்’ என்ற படத்தில் போலீஸ் கமிஷனராக நடிக்கிறேன். நான் பன்முகத்தன்மை உள்ளவன் என்பதால் அனைத்தையும் பயன்படுத்துகிறேன். அரசியலை விட இலக்கியப் பாதையே எனக்கு திருப்திகரமாக இருக்கிறது. அரசியல் பேசுவதை விட இலக்கியங்களைப் பற்றி பேசுவதில் ஒருவிதமான உற்சாகம், தெளிவு, கடமை உணர்ச்சி எனக்கு இருக்கிறது. 
-நாஞ்சில் சம்பத் (அரசியல்வாதி, இலக்கியபேச்சாளர்)

*டிஸ்கவரி குழுமம் ரஜினி பங்கேற்கும் நிகழ்ச்சியை தயாரித்துள்ளது. பியர் கிரில்ஸ் வழங்கும் இந்நிகழ்ச்சி புதிய வடிவில் இருக்கும். ரஜினி பங்கேற்கும் முதல் டி.வி. நிகழ்ச்சி இது. சின்னத்திரைக்கு ரஜினியை அழைத்து வருவதில் எங்களுக்கு பெருமை. ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதியில் இயற்கையோடு ஒட்டி உயிர்வாழும் முறைகளை, உணர்த்தும் வகையில் ரஜினி பங்கேற்றார். 
-டிஸ்கவரி சேனல்