பிக்பாஸ் சீஸன் 3’ நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் அவ்வளவாக பிரபலமாகாமல் இருந்த நடன இயக்குநர் சாண்டி அந்த இல்லத்தை விட்டு வெளியே வரும்போது அவருக்காக ‘ஜெயில்’காத்திருக்கிறது என்று பிரபல இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூலில் சுவாரசியமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். குழப்பம் வேண்டாம். வசந்தபாலனின் அடுத்த இயக்கமான ‘ஜெயில்’படத்தில் ஜீ.வி.பிரகாஷின் சிபாரிசால் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார் சாண்டி.

இயக்குநர் வசந்தபாலனின் பதிவு இதோ,...நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ’ஜெயில்’ திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது.ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார்.பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன்,’சர்வம் தாள மயம்’ திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார்.இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற..,அவர் சொல் தட்ட முடியுமா.உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன்.

நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன்.சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார்.படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன். நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார். படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார்.நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன்.
இந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.
வாழ்த்துகள் சாண்டி.வென்று வாருங்கள்.’ஜெயில்’ காத்திருக்கிறது’...என்று பதிவிட்டிருக்கிறார் வசந்தபாலன்.