தனது இரண்டாவது படமான ‘வெயில்’ படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ்குமாரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த பாலன் தற்போது அதே ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக வைத்து இயக்கிவரும் படம் ‘ஜெயில்’. ‘வெயில்’ ஜெயில்’ என்று தற்செயலாக ரைமிங்காக அமைந்த இந்த தலைப்புகள் குறித்துதனது குருநாதர், இயக்குநர் ஷங்கர் என்ன கமெண்ட் அடித்தார் என்று தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார் வசந்தபாலன்.

...ஜெயில் என்று டைட்டில் வைக்கலாம் என்றபோது தமிழ் தலைப்பு இல்லையே என்று கலங்கினேன்.அதற்காக சிறை என்று வைத்தால் ரீச் ஆகாது சார் இது தான் கவர்ச்சியாக உள்ளது.வெயில் ஜெயில் எப்படி இருக்கு என்று நண்பர்கள் வெயிலையும் ஜெயிலையும் வார்த்தை ஒற்றுமைக்காக நினைவு படுத்தினார்கள்.

என் அப்பாவிடம் தலைப்பு எப்படி உள்ளது என்று கேட்டேன்.உடனே அப்பாவும் வெயில் போல் ஜெயில் வெற்றியடைய வாழ்த்துகள் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.நண்பர்கள் பலரும் அதை நினைவு ப்படுத்தினார்கள்.படத்தின் முதல் முகம் பத்திரிகையில் வெளியான அன்று நிறைய இயக்குநர்கள் அதை குறிப்பிட்டு வாழ்த்தினார்கள்.இயக்குநர் ஷங்கர் சாரும் வெயில் ஜெயில் வெல்க என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.

நேற்று இயக்குநர் இமயம் பாரதிராஜா சாரை ஏதேச்சையாக சந்தித்தேன்.என்னய்யா பண்றே ? உன்னுடைய கடைசி நாடகப்படம் அது காவியம்ய்யா..மக்களுக்கு சரியா புரியலைன்னு கவலைப்படாத....பெயிண்டிங்.....என்றார்.நன்றி சார் என்று கூறினேன்.இப்போ என்ன பண்றே என்று கேட்டார்.ஜெயில் என்று ஒரு திரைப்படத்தின் வேலைகள் நடக்கின்றன என்று கூறினேன்.வெயில் மாதிரி ஜெயிலா....நல்லது...படத்தை எனக்கு காமிய்யா...என்று அன்புடன் வாழ்த்தி என் தோளை அழுத்தமாக பற்றினார்.இமயத்தின் அடியில் சிறு மண்குவியலாய்.....மனம் இமயமாய் எழுந்து ருத்ரதாண்டவம் ஆடியது’ என்று பதிவிட்டிருக்கிறார் வசந்தபாலன்.