தொடர்ந்து பல குழப்பங்களும் சர்ச்சைகளும் நீடித்து வந்த நிலையில், இன்று காலை தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடியும் இத்தேர்தலின் வாக்குகள் உடனே எண்ணப்பட்டு இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது.

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின.

சில தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார்.  இதனை அடுத்து, திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூலை 14ம் தேதி நடத்துவதென ஜூன் 10ம் தேதி நடந்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் அந்த தேதியும் மாற்றப்பட்டு ஜூலை 21[இன்று] தேர்தல் அற்விக்கப்பட்டது. இதன்படி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. ஆர்.கே.செல்வமணி அணியும் எஸ்.பி.ஜனநாதன் அணியும் மோதுகின்றன. இத்தேர்தல் முடிந்த கையோடு  மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள்  இன்று இரவே அறிவிக்கப்படும்.