’அண்ணன் எப்படா போவான் திண்ணை எப்படா காலியாகும்’ என்று காத்திருந்தது போல், ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ரிலீஸில் குழப்பம் இருப்பதால் 12ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த இயக்குநர் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ ஒருவாரம் முன்னதாக, அதாவது நாளையே ரிலீஸாகிறது. இது ‘எ.நோ.பா.தோட்டா’படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முந்தைய நிலவரப்படி நாளை வெள்ளியன்று தனுஷ், கவுதம் மேனன் கூட்டணியின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வும் இயக்குநர் சாந்தகுமார் ஆர்யா கூட்டணியின் ‘மகாமுனி’ ஆகிய இரு படங்கள் மட்டுமே ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரு படங்களுமே பெரும் எதிர்பார்ப்புக்குரிய முக்கிய இயக்குநர்களின் படங்கள் என்பதால் இதே தேதியில் ரிலீஸாவதாக இருந்த சசியின்’சிவப்பு மஞ்சள் பச்சை’பட ரிலீஸை 12ம் தேதிக்கு தள்ளிவைத்து விளம்பரங்களும் செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று காலை முதலே ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’பட ரிலீஸ் சந்தேகம் என்ற செய்தி மெல்ல பரவ ஆரம்பித்தது. துவக்க கட்டப் பேச்சு வார்த்தையின்போது பழைய பாக்கிகளில் பாதி செட்டில்மெண்டை இந்தப் படத்திலும் மீதிப் பணத்தை நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திலும் செட்டில் செய்ய ஒப்புக்கொண்ட ஃபைனான்சியர்கள் திடீர் பல்டி அடித்து முழ் செட்டில்மெண்டையும் தந்தால் கோர்ட்டில் வழக்கை வாபஸ் வாங்குவோம் என்று மிகவும் பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் பரவின. இத்தகவலால் சுதாரித்துக்கொண்ட ‘சிவப்பு மஞ்சள் பச்சை’படக்குழு 12ம் தேதி ரிலீஸ் முடிவை திடீரென மாற்றி ஒருவாரம் முன்னதாகவே வர முடிவெடுத்து தற்போது விளம்பரங்களையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

‘எ.நோ.பா.தோட்டா’ரிலீஸாவதாக இருந்த பெரும்பாலான தியேட்டர்களையே சிவப்பு மஞ்சள் பச்சை பட நிறுவனம் பிடித்துள்ளதால்,முந்தைய பஞ்சாயத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டு அப்படம் ரிலீஸாகும் வாய்ப்பு இன்னும் மங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.