நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வில் சமநிலையற்ற போட்டி நிலவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவு பெருமளவில் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

ஏழை அரசுப் பள்ளி மாணவர்களின் பாதிப்புகளை உணர்ந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தினார். மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முதல்வரும் அதன் பின்னர் 5 அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தர வலியுறுத்தினர்.

இதனிடையே, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று (அக். 29) பிறப்பித்தது.

ஏழை  எளிய மாணவர்களின் மருத்துவக் கனவில் விளக்கேற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மருத்துவப் படிப்பில் 7.5%  அரசுப்பள்ளி மாணவ மாணவியர்க்கு உள் ஒதுக்கீடு பெற அரசாணை வெளியிட்டு ஆளுநரின் ஒப்புதலும் பெற்றது அரசுப் பள்ளிக்குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கிடைத்த வெற்றி ஏழைகளின் கல்விக் காவலர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் என தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.