ஏற்கனவே பெரும்குடிகாரர் என்று பெயரெடுத்த இயக்குநர் ராம்கோபால் சினிமா வெற்றிவிழா நிகழ்ச்சி ஒன்றில் நடிகைகள் தலையில் பீர் ஊற்றி, தன் தலையிலும் ஊற்றிக்கொண்டது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பெண் போராளிகள் பீரைவிட அதிகமாகப் பொங்கிவருகிறார்கள்.

நாகார்ஜூனாவின் ’உதயம்’ தெலுங்கு ரீமேக் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா..!தொடர்ந்து ஆக்சன் கலந்த மசாலா படங்களை தெலுங்கில் இயக்கிவந்த ராம் கோபால் வர்மாவுக்கு ஊர்மிளா நடித்த ’ரங்கீலா’ படத்தின் மூலம் ஹிந்தி திரைஉலக வாசல் திறந்தது.தொடர்ந்து இந்தி, தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், தயாரித்தும் பல விருதுகளையும் பெற்றுள்ள ராம்கோபால் வர்மா தொடர்ந்து ஏதாவது ஒரு  சர்ச்சையில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்தவகையில் அவர் தனது டிவிட்டர் கணக்கில், ஐதராபாத்தில் போக்குவரத்து விதியை மீறி பயணித்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ’ஸ்மார்ட் சங்கர்’ என்ற படத்தை பார்க்க மோட்டார் சைக்கிளில் அவர் 3 பேருடன் அமர்ந்து செல்வது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டு போக்குவரத்து போலீஸ் எங்கே ? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போலீசார், அவரிடம் 3 வது நபராக விதியை மீறி இரு சக்கர வாகனத்தில் பயணித்த குற்றத்திற்கும், தலைகவசம் அணியாமல் சென்ற குற்றத்துக்கும் சேர்த்து 1,335 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்மார்ட் சங்கர் படத்தின் சக்சஸ் மீட் நடந்தபோது போதையில் இருந்த ராம் கோபால் வர்மா, கையில் ஷாம்பைன் பாட்டிலுடன் , படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி கவுரை கட்டிப்பிடித்து பாராட்டினார். அத்தோடு விடாமல் படத்தில் நடித்துள்ள நித்தி அகர்வால், நஃபா நடேஷ் மர்றும் சார்மி கவுர் ஆகியோரை கையை பிடித்து இழுத்து மதுவை அவர்கள் தலையில் ஊற்றி அபிசேகம் செய்தார்.ஒரு கட்டத்தில் உற்சாகத்தின் மிகுதியில்  கையில் மது பாட்டிலுடன் சுற்றிவந்த அவர் தன் தலையில் தானே  மதுவை ஊற்றி ரகளையில் ஈடுபட்டுள்ளார்

போலீசார் அபராதம் விதித்த விரக்தியிலும், தான் உற்சாகமாக இருப்பதை காட்டிக் கொள்ளவும் ராம் கோபால் வர்மா இதுபோன்று நடந்து கொண்டதாக இரு வேறு கருத்துக்கள் வெளியான நிலையில், இணையத்தில் பரவி வரும் இந்த காட்சிகளை பார்த்து விட்டு அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.பெண்களை போகப்பொருளாக சினிமாவில் காட்சிப்படுத்தி புகழ் பெற்ற இயக்குனர் ராம் கோபால் வர்மா, நிஜத்திலும் தான் இப்படித்தான் என்று கீழ்த்தரமாக நடந்து கொள்வதாக நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அவர் தொடர்பான அத்தனை சர்ச்சையான வீடியோக்களையும் ராம் கோபால் வர்மாவே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.