சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. பிரபலங்கள் குறித்து டுவிட்டரில் கருத்து சொல்லி, சர்ச்சையில் சிக்கிக் கொள்வது மட்டுமில்லாமல், அவர் இயங்கும் படங்களும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இந்தியில் ரங்கீலா, தெலுங்கில் லட்சுமி என்.டி.ஆர் ஆகிய படங்கள் மிகப்பெரும் பிரச்சனைகளை கிளப்பின. சமீபத்தில் ஆந்திராவின் முதல்வராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை குறித்து "கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு"  என்ற பெயரில் ராம்கோபால் வர்மா எடுத்த படம், ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது. 

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு எவ்வித ஒளிவு மறைவுமின்றி ராம் கோபால் வர்மா மனம் திறந்து பதிலளித்துள்ளார். அதில் தனக்கு உயிர் வாழ ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது என்றால், அதனை நடிகை ஸ்ரீதேவியின் கல்லறையில் தான் வாழ ஆசைப்படுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது உடலை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே தகனம் செய்ய வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் எல்லாருடைய வாழ்க்கை வரலாறையும் படமாக எடுக்குறீர்களே, ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுப்பீர்களா என்ற கேள்விக்கு, ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம் என தெரிவித்துள்ளார்.  ஸ்ரீதேவி மரண செய்தியை கேள்விப்பட்டு மனம் உருகி பல பதிவுகளை போட்டிருந்தார் ராம் கோபால் வர்மா. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து அவர் அளித்துள்ள பதில்கள் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.