கடந்த ஏழெட்டு வருடங்களாகவே பார்த்திபன் இயக்கிவரும் சில படங்களில் கணவனுக்கு துரோகம் செய்யும்,அவனை விட்டு வேறொருவனுடன் ஓடிப்போகும் பெண்கள் குறித்தே  சித்தரித்து வருவதாக வந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருக்கிறார் அவர். தனது குடும்ப வாழ்க்கையில் எந்த குழப்பமும் இல்லாத நிலையில் அந்த விமர்சனங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தியுள்ளதாக அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

பார்த்திபன் இயக்கி அவர் ஒருவரே மட்டும் நடித்துள்ள ‘ஒத்தச் செருப்பு’கடந்த வாரம் ரிலீஸாகி ஓரளவுக்கு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. 90ல் திருமணம் செய்து 2001ல் விவாகரத்து செய்த தனது முன்னாள் மனைவி சீதாவை மறக்க முடியாமல் அடுத்த சில ஆண்டுகளில் அவர் இயக்கிய ‘பச்சக்குதிர’,’கோடிட்ட இடங்களை நிரப்புக’,’கதை திரைக்கதை வசனம்’போன்ற படங்களில் கணவனைக் கழுத்தறுக்கும் கேரக்டர் பெண் பாத்திரங்களை தொடர்ந்து காட்டி வந்தார் பார்த்திபன். தற்போது ரிலீஸாகியுள்ள ‘ஒத்தச் செருப்பு’படமும் கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்ணின் கதைதான். இதை சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டி பழசை விட்டு வெளிய வாங்க பார்த்திபன் என்று சொல்லியிருந்த நிலையில் வெகுண்டெழுந்துள்ளார் அவர்.

இது குறித்து நேற்று நடந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’பட விழாவில் பேசிய அவர்,‘கடந்த வாரம் எனது நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்தை வெளியிட ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.விமர்சனங்கள் எல்லாமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் கதையாக இது எனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக பதிவு பண்ணியிருந்தார்கள். அது ரொம்பவே வருத்தமான ஒரு வி‌ஷயம்.

என் குடும்பத்தில் எவ்வித பிரச்சினையும் இன்றி ரொம்பவே சந்தோ‌ஷமாக இருக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். என் இரண்டு பெண்களின் திருமணமும் அனைத்து குடும்பமும் இருந்து தான் நடந்தது. இப்போது போய் ஒரு படம் எடுத்து, யாரையோ சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. ஒரு படம், அதன் கதை அதை என்னவாக பண்ணலாம் என்பது மட்டுமே எண்ணினேன்.அப்படி விமர்சனத்தில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு ஒரே ஒரு வி‌ஷயம், அப்படியொரு வி‌ஷயமே இல்லை. தேவையில்லாமல் ஒரு குழப்பத்தைச் சொல்லிக் கஷ்டப்படுத்த வேண்டாம்’என்று சப்பைக்கட்டு கட்டினார். அடுத்த படத்துலயாவது நல்ல குணமுள்ள ஒரு பெண் கேரக்டரை அறிமுகப்படுத்துங்க பாஸ்.