ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரத்துக் குரல் கொடுத்த ‘அசுரன்’படம் தொடர்பாக இயக்குநர்கள் வெற்றிமாறனையும் பா.ரஞ்சித்தையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்த அத்தனை நாரதர்களுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

பூமணியின் ‘வெக்கை’நாவலை அசுரனாக எடுத்து வெளியிட்ட வெற்றிமாறனுக்கு, தலித்களின் பிரச்சினை குறித்து மிகவும் ஆழமாகப் பதிவு செய்திருப்பதாக பாராட்டுகள் குவிந்துவரும் வேளையில் சிலர் பா.ரஞ்சித்துக்கும் அவருக்கும் கோள்மூட்டி விட்டனர். அதிலும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் புதுச்செயலாளர் வன்னி அரசு ‘ஜெய்பீம்’ என்று சொல்லிக்கொள்ளாமல் எடுக்கப்பட்டிருக்கும் உண்மையான தலித் படம் என்று பா.ரஞ்சித்தை நேரடியாக சீண்டி ஒரு பதிவு வெளியிட்டதோடு, இயக்குநர் வெற்றிமாறனையும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பும் ‘ஜெய்பீம்’வாழ்த்தும் வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் ‘அசுரன்’படம் குறித்து கடந்த 4 நாட்களாக தனது கருத்து எதையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்த பா.ரஞ்சித் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில்,...தமிழ்த்திரையில் #அசுரன்’ கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் @VetriMaaran தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் @dhanushkrajaநம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி @theVcreations
 மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!! என்று பதிவிட்டிருக்கிறார். அவரது அப்பதிவுக்குக் கீழே காரசாரமான கமெண்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.