திரெளபதி படத்தின் மூலம் அஜித் சாதி வெறியை ஆதரிப்பதாக தவறான தகவல்கள் பரப்பியவர்களுக்கு தனது மகளை வைத்து அஹிம்சை முறையில் பதிலடி கொடுத்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி. 

திரெளபதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் அந்த ட்ரெய்லரில் குறிப்பிட்ட சாதியினர் நாடகக் காதல் செய்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பதாக வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை விட பல மடங்கு ஆதரவு கிடைத்து வருகிறது.  

இந்தப்படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் நடித்துள்ளார். இதனால் ஜாதி படத்தில் அஜித் மைத்துனர் எப்படி நடிக்கலாம்? என ஒரு தரப்பினர் முண்டு தட்டி வருகின்றனர்.  அதேவேளை மோகன் ஜி அஜித்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவும் வெளியாகி அந்தப் பரபரப்புக்கு எண்ணெய் ஊற்றியது.  ஆனால் அந்தப்புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ரசிகராக அஜித்துடன் எடுக்கப்பட்டது என மோகன் ஜி விளக்கம் அளித்திருந்தார்.  

'திரௌபதி' இயக்குநர் மோகனை அழைத்து பாராட்டினார் அஜித்’’ சில நேரங்களில் அஜீத்தின் நேர்மையான துணிவு என்னை பிரமிக்க வைக்கிறது என மோகன் கூறியதாக ஒரு பதிவு உலா வந்தது.  ஆனால், தனது படத்திற்கும் அஜித்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மீண்டும் மீண்டும் மோகன் ஜி விளக்கி வந்தார். ஆனால் அதையும் மீறி ஒரு பிரபல வார இதழ், ‘’சாதி வெறியை ஆதரிக்கிறாரா அஜித்? உண்மை என்ன? என்கிற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டு இருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த திரெளபதி இயக்குநர் மோகன்.ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில், ’’திரெளபதி பற்றி கட்டுரை எழுதி சம்மந்தமில்லாத மனிதரை சம்மந்தப்படுத்திய அந்த நபர்களுக்கு நானும் என் மகளும் தரும் அன்பு பரிசு இதான்.. என்றும் தல என் மரியாதைக்குரியவர்..’’கூறியிருக்கும் அவர், தனது மகளை வைத்து அஜித்துக்கும், அந்த வார இதழுக்கும் முத்தம் கொடுக்க வைத்து அஹிம்சை முறையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.