சில வருடங்களாக தயாரிப்பில் இருந்து படம் திரைக்கு  வருமா வராதா என்ற சந்தேகப்பட்டியலில் இருந்த சமுத்திரக்கனியில் ‘வெள்ளை யானை’ எப்படி வந்திருக்கிறது என்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

‘திருடா திருடி’ இயக்குநர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட படம் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி விவசாயியாக நடிக்கிறார். தனுஷின் ரசிகர் மன்றத்தலைவராகவும் இயங்கிவரும் சுப்ரமணிய சிவா ‘வட சென்னை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது அதே தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியின் ‘அசுரன்’ படத்திலும் நடிக்கிறார். எனவே ‘வெள்ளை யானை’ படம் கைவிடப்பட்டதோ என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகிவிட்டதாக தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன்,...இன்றைய மாலைப்பொழுது மிகவும் அர்த்தம் நிறைந்ததாக இருந்தது. இயக்குனர் சுப்ரமணியசிவா அவர்கள் இயக்கி post production ல் இருக்கும் 'வெள்ளை யானை' திரைப்படத்தின் முதல் வடிவத்தைப் பார்த்தேன். தமிழின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாக வந்திருக்கிறது. விவசாயத்தை வாழ்வாகக்கொண்டிருக்கும் மக்களின் ஆன்மாவாக இப்படத்தைப் பார்க்கிறேன்.

அமீர்கான் தயாரித்த இயக்குனர் அனுஷ்கா ரிஸ்வியின் "Peepli ( live ) போல எல்லோராலும் கொண்டாடப்போகும் படமாக இருக்கும்.விவசாயம் பொய்த்து பெருநகரங்களில் அகதிகளாக தஞ்சமடையும் எளிய மனிதர்களைப்பார்க்கிற போது உங்களுக்குள் ஒரு குற்ற உணர்வை இந்தப்படம் உருவாக்கும். நீண்ட நாளைக்குப்பிறகு பல காட்சிகளில் கண்கள் கலங்கினேன்.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயக்கிராமங்கள் என்கிற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றால் வெள்ளை யானையை இந்தியாவின் தலைச்சிறந்த படங்களில் ஒன்றாக உணர்வீர்கள்.இயக்குனர் சமுத்திரக்கனி இது வரையிலும் இல்லாத மெருகேறிய நடிப்பால் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார். அவரை நாயகனாக்கி அடர்த்தியான ஒரு திரைக்கதையை எழுதலாம் என்கிற நம்பிக்கையை உருவாக்கியதில் முழு வெற்றியடைந்திருக்கிறார்..

இந்திய விவசாயிகளின் உண்மை நிலையறிய அய்யாக்கண்னுக்களை நம்பி பிரயோசனமில்லை என்கிற புரிதலுக்கு வந்த நமக்கு இந்தப்படம் பெரிய சாட்சியமாகவும் உதவியாகவும் இருக்கும். இயக்குர் திரு.சுப்ரமணிய சிவா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் கோடி முத்தங்கள்’...என்று பதிவிட்டிருக்கிறார்.