பொதுக்குழு மேடையில் வைத்து ‘இயக்குநர் சங்கமா, கேளிக்கை விடுதியா?’என்று கேள்வி எழுப்பியதற்காக தன் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தால் அதை எதிர்கொள்ளத்தயார் என்று இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு வடபழனி கமலா திரையரங்கில் நடந்த இயக்குநர் சங்கத்தின் அவசரப் பொத்துக்குழுவில் கலந்துகொண்ட இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்குநர் சங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். சங்கத்தில் மது பாட்டில் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ஓப்பனாகப் போட்டு உடைத்தார். பாரதிராஜா குறித்தும் சில சர்ச்சையான கருத்துக்களைச் சொன்னார். இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை இருக்கும் என்று  சொல்லப்பட்டது.

அந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்து இன்னும் காட்டமாக பதிலளித்த பழனியப்பன்,’பாலசந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் படங்களை மாட்டியுள்ள சங்கக்கட்டிடத்திற்குள் அமர்ந்து குடித்தால் நான் பொதுமேடையில் கேள்வி கேட்கத்தான் செய்வேன். சங்கம் நல்லபடியாக செயல்படவேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது. தீபாவளிக்கு தீபாவளி உறுப்பினர்களுக்கு மிக்‌ஷர் கொடுக்கிற சங்கமாகவே இயக்குநர் சங்கம் இருக்கிறது. அதுவும் அந்த மிக்‌ஷரை ஏதாவது ஒரு நடிகரிடமிருந்து ஸ்பான்சர் பெற்றுத் தருகிறார்கள். நாளைக்கு அந்த நடிகருக்கும் ஒரு இயக்குநருக்கும் இடையில் ஒரு பிரச்சினை வந்தால் வாங்கிய மிக்‌ஷருக்கு விசுவாகமாகத்தானே இந்த சங்கம் இயங்கியாகவேண்டும்?’என்று ஏடாகூடம் செய்கிறார் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டே தீரவேண்டிய கரு.பழனியப்பன்.