நடிகர் சங்கத் தேர்தலுக்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியிருக்கும் நிலையில், ‘’விஷால் ஒரு அரசியல் கிரிமினலாக வந்திருக்கவேண்டியவர். தப்பித்தவறி நமது சினிமா துறைக்கு வந்துவிட்டார்’ என்று பெரும்போடு போட்டிருக்கிறார் இயக்குநர் சேரன்.

நலிந்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.அவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா பேசும்போது, ‘‘தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாற வேண்டுமென்றால் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும். அதேபோன்று தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தை தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் வர்த்தக சபை என மாற்றியே தீருவேன். நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஒரு புல்லுருவியாக விஷால் இருக்கிறார். அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் சேரன், ‘‘விஷால் ஒரு கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர்.தப்பித்தவறி நமது சினிமா துறைக்கு வந்துவிட்டார்.அவர் மட்டும்  அரசியலுக்குள் புகுந்திருந்தால் மிகப்பெரிய அரசியல்வாதி ஆகியிருப்பார்’’ என்று கூறினார்.

பின்னர் நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளராக போட்டியிடும் ஐசரி கணேஷ் பேசும் போது, ‘‘நிச்சயம் சுவாமி சங்கரதாஸ் அணி வெற்றி பெறும். வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்திற்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பாலமாக இருப்பேன்’’ என்றார். நிகழ்ச்சியில் முடிவில்  6 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஐசரி கணேஷ் தனது சொந்த செலவில் இருந்து 26 தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கினார்.