துணை இயக்குனராக ஆரம்பமான வாழ்க்கை:

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நாட்டம், சேரன் பாண்டியன் போன்ற கிராமத்து மனம் கமழும் படங்களில் ஒரு துணை இயக்குனராக வேலை செய்து, பல்வேறு கஷ்டங்களை கடந்து தன்னை ஒரு முன்னணி இயக்குனராகவும், தேசிய விருது இயக்குனராகவும் மெருகேற்றி கொண்டவர் இயக்குனர் சேரன்.

இயக்குனர் அவதாரம்:

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதை தொடர்ந்து பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை என தொடர்ந்து வெற்றி படங்களாகவும், குடும்பமாக ரசித்து பார்க்க கூடிய படங்களையும் கொடுத்தார்.

நடிப்பிலும் சதம் அடித்த சேரன்:

சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் தன்னை நடிகராக அறிமுகப்படுத்திக்கொண்டு சேரன், இந்த படத்தை அடுத்து நடித்த ஆட்டோகிராப் படத்தில் இவருடைய நடிப்பு முன்னணி நடிகர்களையே ஆச்சரியப்படுத்தியது. அந்த அளவிற்கு எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

சரிவை சந்தித்த சேரன்:

இந்த படத்திற்கு பின் சேரன் இயக்கத்தில் வெளியான படங்களும், நடித்த படங்களும் சொல்லிக்கொள்ளும் படியாக வெற்றி பெறவில்லை. இதனை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட, கடைசியாக தன்னுடைய வெற்றி திரைப்படம் ஆட்டோகிராப் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புது முயற்சி:

இந்நிலையில் புதிய யுடியூப் சேனல் ஒன்றை விரைவில் துவங்க உள்ளதாக கூறி இருந்த சேரன், சமீபத்தில் 'வால் போஸ்டர்' என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலில் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

விஜய் சேதுபதியுடன் படம்:

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்காக எப்படி பட்ட கதையை எழுதி வைத்திருக்கிறேன் என்பதை ட்விட்டர் மூலம் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 

"தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது..  அண்ணன்களும்  தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து  பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்... என பதிவிட்டுள்ளார்.