பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியின் துவக்க நாட்களில் தான் சக போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டது உண்மைதான் என்றும் சில நாட்கள் கழித்து தனது அருமையை உணர்ந்துகொண்டு அவர்கள் மரியாதை கொடுக்கத்துவங்கிவிட்டார்கள் என்றும் இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 91 நாட்கள் வரை தாக்குப் பிடித்த இயக்குநர் சேரன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியே வந்தார். அதன் பின்னர் முதன் முறையாக இன்று காலை சென்னை, வடபழனி கமலா தியேட்டருக்கு ‘நம்ம வீட்டு பிள்ளை’படம் பார்க்க வந்த சேரன் படத் திரையிடலுக்கு முன்பு ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் "’பிக் பாஸ்’ வீட்டிற்குள் உங்களுக்கு அவமரியாதை ஏற்பட்டதா? உங்களுடைய சக இயக்குநர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து இருந்தார்களே" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சேரன், "91 நாட்கள் என்ன நடந்தது என்பதை இந்த உலகத்துக்கே காட்டியாச்சு. அதைத் தாண்டி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.'பிக் பாஸ்' என்பது ஒரு விளையாட்டு. அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். என்னுடைய நண்பர்கள் என் மீதான அன்பின் வெளிப்பாடாகத்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று அவர்களை நான் திருப்பிக் கேட்பதற்கான வாய்ப்பே இல்லை. அது என் மீதான மரியாதையாக எடுத்துக்கொள்வேன்.

எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் கிடைத்தது அவமரியாதை கிடையாது. அந்தச் சூழலில் அவர்கள் என்னைப் புரிந்து கொண்ட விதம் துவக்கத்தில் அப்படி இருந்தது. ஆனால், போகப் போக எனக்கான மரியாதையை அவர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதைத்தான் நான் என் வெற்றியாக நினைக்கிறேன். அங்கிருந்து வெளியேறும்போது நல்ல பெயருடன்தான் வந்தேன். எந்தவொரு இடத்திலுமே அவமரியாதை ஏற்பட்டதாகப் பார்க்கவில்லை.இங்கு திரையுலகில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என இரண்டு ஜாம்பவான்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆரைப் பிடித்தவர்களுக்கு சிவாஜியைப் பிடிக்காது. அது அவமரியாதை என்று சொல்ல முடியாது. அதே போலத் தான் சிவாஜியைப் பிடித்தவர்களுக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது. இங்கு பார்ப்பவர்களின் கண்ணோட்டம் தான் முக்கியம்.  பிக்பாஸ் இல்லத்தில் நடந்த அவமரியாதை சம்பந்தப்பட்ட விஷயத்தை நான் இப்போதைக்கு அப்படித்தான் பார்க்கிறேன்’என்றார் சேரன்.

படம் முடிந்து வெளியே வந்தபோது அவரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் அடுத்த படம் எப்போது? என்று கேள்வி எழுப்பியபோது, மிக விரைவில் அறிவிக்கிறேன்’என்றபடி எஸ்கேப் ஆனார்.