2004ல் வெளிவந்த கமலின் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’படத்துக்குப் பிறகு கடந்த 15 வருடங்களாக வெற்றியை ருசிக்காமல் போராடிவரும் இயக்குநர் சரணின் ‘மார்க்கெட்ராஜா எம்.பி.பி.எஸ்’படம் திரைக்குவரத் தயாராகியுள்ளது. இப்படம் சரணுக்கு வாழ்வா சாவா படம் என்பதால் திரையுலகில் சிறிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சரண் ‘சிறந்த பொழுதுபோக்கு’ படங்களை எடுப்பதில் நிபுணர்.’காதல் மன்னன்’ தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய சரண், விக்ரமை வைத்து இயக்கிய ’ஜெமினி’ படம் வணிக வெற்றியில் சாதனை படைத்தது.அவரது திரைப்படங்கள் காதல், ஆக்‌ஷன், நகைச்சுவைகளின் சரியான கலவையாக இருக்கும். எனவே, இளைஞர்கள் மற்றும் பல தரப்பட்ட பார்வையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் படங்களாக இருக்கும்.

இடையில் ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கலுக்குப் பிறகு தன்னை மீட்டெடுக்கும் முயற்சியாக ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் மூலம் இந்த படம் அனைவருக்கும் 100% பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.சிறந்த பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தை வடிவமைப்பதிலும், சரியான கலைஞர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் சரணின் புத்திசாலித்தனம். அந்த புத்திசாலித்தனம் இப்படத்தில் எடுபட்டால்தான் இனி சரண் சினிமாவில் நீடித்திருக்கமுடியும் என்கிற நிலை.

இப்படத்தில் ஓவியாவின் காதலரான ஆரவ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.ராதிகா சரத்குமார் இந்தப்படத்தில் ஒரு தாதாவாக நடித்திருப்பது மற்றொரு சிறப்பம்சம்.நாசர், காவ்யா தாப்பர், ஆதித்யா, சாம்ஸ், நிகிஷா பட்டேல் மற்றும் பலருக்கும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.ரோகேஷ் எழுதிய வரிகளுக்கு, சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.முதல் சிங்கிள் பாடலான ‘தா தா’ பாடல் ஒரே இரவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.சுரபி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கான எஸ்.மோகன் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில், தனது மூத்த சகோதரர் சரண் உடன் முதன்முறையாக இணைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் கே.வி.குகன்.