தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் சிகரம் பாரதிராஜா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இயங்கிவருகிறார். 

ஸ்டுடியோக்களில் மட்டுமே உளவாடி கொண்டிருந்த கேமராக்களை கிராமங்களுக்கு தூக்கி சென்று, கிராமத்து வாழ்க்கையை திரைவடிவில் மக்களுக்கு காட்டியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவிற்கு ஏராளமான திறமையான நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்தவர் பாரதிராஜா. 

தமிழ் திரையுலகிற்கு திறமை வாய்ந்த நடிகர்கள், நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்தவர் பாரதிராஜா. கார்த்திக், பாண்டியன் உள்ளிட்ட நடிகர்களையும் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற நடிகைகளையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன், சீமான் ஆகியோர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து பின் நாட்களில் பெரிய இயக்குநர்களாக வளர்ந்தவர்கள்.

தமிழ் சினிமா ரசிகர்களை நேரடியாக கிராமங்களுக்கு அழைத்து சென்ற பாரதிராஜா, சிவப்பு ரோஜாக்கள், பொம்மலாட்டம் போன்ற வித்தியாசமான கதைக்கரு கொண்ட படங்களையும் இயக்கியுள்ளார். இயக்கத்திற்கு அப்பாற்பட்டு நடிப்பிலும் அசத்தியுள்ளார் பாரதிராஜா. ஆயுத எழுத்து, பாண்டிய நாடு, குரங்கு பொம்மை ஆகிய படங்கள் அவரது நடிப்பு திறமையை பறைசாற்றும் படங்களில் சில. 

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் களைப்படையாமல் இயங்கி கொண்டிருக்கும் பாரதிராஜா, தற்போது ஓம்(ஓல்டு மேன்) என்ற படத்தை இயக்கி நடித்துவருகிறார். இந்த படத்தில் பாரதிராஜாவை தவிர மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் புதிய முகங்கள்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாரதிராஜாவிடம், உங்களை தவிர மற்ற அனைவருமே புது முகங்களாக இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளீர்கள். எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுத்தீர்கள்? இந்த முயற்சி விஷப்பரீட்சையாக தெரியவில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த பாரதிராஜா, இது விஷப்பரீட்சை என்றால், இதை நான் 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே செய்துவிட்டேன். கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் ஒரு முகம் கூட அந்த சூழலில் தெரிந்த முகம் கிடையாது. சுதாகர், ராதிகா என அனைவருமே புது முகங்கள் தான். கவுண்டமணி கூட வளர்ந்துவந்த சமயம்தான் அது. அப்போதே செய்துவிட்டேன். இப்போது பெரிய விஷயமா? என மார்தட்டி பெருமிதம் கொண்டார் பாரதிராஜா.