சில படங்கள் தாமதாவது குறித்து எழுதும்போது அப்படம் குறித்து பரிதாப உணர்ச்சி தோன்றுவது தவிர்க்கமுடியாதது. அந்தப் பரிதாபத்துக்குரிய தற்போதைய படமாக மாறியிருக்கிறது தனுஷ் கவுதம் மேனன் கூட்டணியின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. வரும் வரம் ரிலீஸாகும் என்று சொல்லப்பட்ட இப்படம் தீபாவளிக்கு முன்னர் ரிலீஸாக வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிகிறது.

‘எ.நோ.பா.தோட்டா’படம் 6ம் தேதி உறுதியாக ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்து பின்னர் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிய நிலையில், அப்படத்தை ரிலீஸ் பண்ண உதவுவதற்காக கவுதம் சூர்யாவுடன் இணைந்து, லைகா தயாரிப்பில்  ஒரு படம் இயக்கவிருப்பதாகவும் அந்த அட்வான்ஸ் பணத்தை இப்பட ரிலீஸுக்கு உதவப்போவதாகவும் நம்பகமான தகவல்கள் வந்தன. இந்நிலையில் ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாக வாங்க லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சந்திக்க கவுதம் லண்டன் சென்றிருந்தார்.

ஆனால் முன் பணத்தை கொடுக்க தயாராக இருந்த லைகா சுபாஷ்கரன் 12ம் தேதி ‘எ.நோ.பா.தோட்டா’வை ரிலீஸ் பண்ணக்கூடாது. ஏனெனில் அது அதற்கு அடுத்த வாரம் ரிலீஸாகவுள்ள எங்கள் ‘காப்பான்’படத்தைப் பாதிக்கும் என்ற நிபந்தனையுடன் தான் முன் பணத்தையே வழங்கினாராம். வேறு வழியின்றி கவுதம் அதற்கு ஒத்துகொள்ள, அடுத்தடுத்த வாரங்களில் சில முக்கியமான படங்கள் ரிலீஸாகவுள்ளதால் தீபாவளிக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தள்ளிதான் இப்படம் ரிலீஸாகுமாம். அந்த முன்கூட்டிய ரிலீஸ் பட்டியலில் தனுஷின் இன்னொரு படமான ‘அசுரனும் இருப்பது காலக்கொடுமை.