தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஒருவழியாக மிக விரைவில் தியேட்டர்களில் ரிலீஸாகவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ட்விட் செய்துள்ளார். இப்படம் துவங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன.

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் கெளதம்மேனன் எழுதி இயக்கியிருக்கும் படம் ’என்னை நோக்கிப் பாயும் தோட்டா’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் இயக்குநர் கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாமதமானது. இப்படத்தை ஒரேயடியாக கிடப்பில் போட்ட கவுதம் அடுத்து விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தைத் துவங்கி அதையும் கிடப்பில் போட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா குறித்த வெப் சீரியலில் பிசியானார்.

இந்தப் பஞ்சாயத்துகளால் அப்படி ஒரு படம் இருப்பதை தனுஷும் அவரது ரசிகர்களும் மறந்துபோன நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை படத்தின் தயாரிப்பாளர் மதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் செய்தியில், ’எனை நோக்கி பாயும் தோட்டா’ முழுமையாக தயாராகிவிட்டது. மிக விரைவில் படம் தணிக்கை செய்யப்பட்டு, இவ்வளவு காத்திருப்பை பூர்த்தி செய்யும் படமாக ரிலீஸாகும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே காத்திருந்து காத்திருந்து மிகவும் டயர்டாகிவிட்டதால் தயாரிப்பாளரின் இச்செய்தியை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் கூட செய்யவில்லை.