இந்த படத்தின் மூலம், இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில், ஜோதிட நம்பிக்கை உடைய ஹீரோவாக, தனது ராசிக்கேற்ற பெண்ணைத் தேடி, அவரது ராசியுடன் ஒத்துப்போகும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற உயர்ந்த லட்சியம் கொண்டவராக ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார். 

 அவருடன் ரெபா மோனிகா ஜான், திகங்கனா சூரியவன்ஷி என டபுள் ஹீரோயின்கள்  நடித்துள்ளனர். பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ள 'தனுசு ராசி நேயர்களே' படத்துக்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

படத்தின் தலைப்புக்கேற்ப ஜோதிடம், ராசியை நம்பும் ஓர் இளைஞனின் வாழ்வில் அவனது இந்த நம்பிக்கையால் ஏற்படும் பிரச்சினைகளை இப்படம் விவரிக்கிறதாம். மேலும், சில அதிரடி சம்பவங்களையும் எதிர்கொள்ளும் அந்த இளைஞன் அனைத்தையும் எப்படிச் சமாளிக்கிறான் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பதாகக் கூறுகிறார் அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படம் வரும் டிசம்பர்-6ம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநாளில்தான், இயக்குநர் எஸ்.ஏ.சி - நடிகர் ஜெய்யின் கேப்மாரி படமும் ரிலீசாகவுள்ளது. இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.