ஏ.ஆர்.முருகதாஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் 4 நாட்கள் ரசிகர்களின் கொண்டாட்டம் என்பதால் பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் தற்போதைய நிலவரப்படி சோசியல் மீடியாவில் "தர்பார்" படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களே வருகின்றன. 

சூப்பர் ஸ்டார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போலீஸ் வேடத்தில் நடித்துள்ளதாலும், பொங்கலை முன்னிட்டு சோலோ ரேஸில் இறங்கிய ஒரே படம் "தர்பார்" தான் என்பதாலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் அந்த படம் மட்டுமே ஒடிக்கொண்டிருக்கிறது. 

ஆனால் முதல் நாள் மட்டுமே நன்றாக வசூலித்த "தர்பார்" திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சறுக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "பட்டாஸ்"  திரைப்படம் வரும் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுற்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகியோர் நடித்துள்ளனர். பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள அந்த படத்தை 1500 தியேட்டர்களில் திரையிட உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. 

இதனால் "தர்பார்" படம் சரியாக ஓடாத திரையரங்குகளில் அதை தூக்கிவிட்டு,  "பட்டாஸ்" படத்தை திரையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் "தர்பார்" படம் முறியடிக்க முடியாத வசூல் சாதனையை அவரது மாப்பிள்ளை தனுஷ் சாதிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.