தனது இசையால் மட்டுமல்ல நடிப்பிலும் ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார் ஜி.வி.பிரகாஷ். ஜென்டில்மேன் படத்தில் 6 வயது சிறுவனாக சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என தனது திரைப்பயணத்தை தொடங்கிய ஜி.வி., அசுரன் வரை தனது அசத்திய திறமையால் கொடிகட்டி பறக்கிறார். இசையமைப்பாளராக தனக்கு முதன் முதலில் வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்த வசந்த பாலனுடன், மீண்டும் கைகோர்த்துள்ளா ஜி.வி.பிரகாஷ். 

2006ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கிய வெயில் படம் மூலம் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது மீண்டும் 14 வருடங்கள் கழித்து வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் படத்தில் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் இணைந்துள்ளார். கடந்த ஒருவருடமாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த திரைப்படம் ஊரடங்கிற்கு பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஆர்யாவின் “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதி ஹீரோயினாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் தனுஷ்- அதிதிராவ் இணைந்து பாடியுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தாக பாடலை ஏற்கனவே அறிவித்திருந்தபடி சரியாக 6 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனுஷ் - அதிதி ராவ் இணைந்து பாடியுள்ள அந்த பாடல் செவி வழியே நுழைந்து மனதையும் மயக்குவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.