என் மகன்தான் தனுஷ் என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும் என்று கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் கண்ணீர் பெருக்குடன் கூறியுள்ளார்.

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் காணாமல்போன தனது மகன் கலைச்செல்வன் தான், திரைப்பட நடிகர் தனுஷ் என்று உரிமை கோரி இருந்தனர்.

மேலும், தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் தனுசின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்டது. மேலும், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையில், தனுஷின் வழக்கறிஞர், ‘பணம் கேட்டு கதிரேசன் - மீனாட்சி தம்பதி மிரட்டுகிறார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று வெளியானது. இதில் கதிரேசன் தரப்பினர், மனுவில் குறிப்பிட்டு இருந்த தகவல்கள் பொய்யானவை என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும், கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நீதிமன்ற வளாகத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 'மனது கஷ்டமாக இருக்கிறது. தீர்ப்பு இப்படி ஆகுமென்று நினைக்கவே இல்லை.

பணம் ஜெயித்துவிட்டது. என் மகன்தான் தனுஷ் என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும். தனுஷ்தான் எங்கள் மகன்” என்று உணர்ச்சி பெருக்குடன் கூறியுள்ளார்.