இன்றைய இளம் நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர், குறுக்கு வழியில்  அடுத்த ரஜினி, அடுத்த எம்.ஜி.ஆர். ஆகும் முயற்சியில் அவர்களது படத் தலைப்புகளை தங்கள் படங்களுக்குப் பயன்படுத்தத் துடித்து வரும் நிலையில் தனுஷின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’பட டைட்டிலுக்கு ஒரு தயாரிப்பாளர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

வெற்றிமாறனுடன் இணைந்து ‘அசுரன்’படத்தில்  பணியாற்றிய தனுஷ் அப்படம் முடிந்தவுடன் ஒரு சில தினங்கள் கூட ஓய்வெடுக்காமல், கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து பணியாற்றும் அடுத்த படத்துக்கு லண்டன் கிளம்பிவிட்டார்.இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் துவங்கி பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி அனுமதி பெறாததால் அற்விக்கப்படவில்லையே தவிர, இப்படத்துக்கு ‘எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’படப்பெயரை படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது.

எம்ஜியார் இரட்டை வேடங்களில் நடிக்க 1973ல் வெளிவந்த அப்படம் வசூலில் பல சாதனைகள் நிகழ்த்தியது. எம்ஜியாருக்கு ஜோடியாக லதா,மஞ்சுளா, சந்திரிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இத்தலைப்பு பிரலம் என்பதால் கார்திக் சுப்பாராஜும் தனுஷும் இதைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ‘உலகம் சுற்றும் வாலிபன்’படத்தை டிஜிட்டலில் நவீனப்படுத்தி வெளியிட சாய் நாகராஜன் என்கிற தயாரிப்பாளர் உரிமை பெற்றுள்ளார். அது குறித்து செய்தி வெளியிட்ட அவர் , “எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வருகிறோம். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் உரிமை என்னிடம் இருக்கிறது. எனவே தலைப்பை யாருக்கும் கொடுக்க மாட்டோம்” என்று அடித்துக்கூறுகிறார்.

இதே போன்று எம்ஜியாரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’தலைப்புக்குப் பிரச்சினை வந்தபோது அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சாமர்த்தியமாக ‘நம்ம வீட்டுப் பிள்ளை’என்று மாற்றி ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. அதே பாணியில் தனுஷும் கார்த்திக் சுப்பாராஜுக் ஏதாவது ஒரு குறுக்கு வழியில் உலகத்தை சுற்ற முயற்சிக்கிறார்களா பார்ப்போம்.