கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை கடந்து தற்போது, தமிழகத்திலும் அதிகரித்துள்ளதால், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கை 600 தாண்டி உள்ளதால், 144  தடை நீடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

திடீர் என இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டி வந்த பலர், அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. 

ரசிகர்கள் உதவி:

இந்த இக்கட்டான சூழ்நிலையை மக்கள் கடந்து வரும் விதமாக, மத்திய மாநில அரசுகள் சார்பில் நல உதவிகள் அறிவிக்கப்பட்டதையும் தாண்டி, விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட பிரபலங்களின் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.

தனுஷ் ரசிகர்களின் உதவி:

அந்த வகையில், தேனி மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும், மலைவாழ் மக்கள், வேலை இல்லாத காரணத்தால், சாப்பிட கூட வழியின்றி, பலர் தண்ணீரை மட்டுமே குடித்து விட்டு உயிர் வாழ்ந்து வருவதாக யாரோ ஒருவர் மூலம்  தனுஷ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவந்தது.

எனவே உடனடியாக அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு சென்று, அந்த கிராம மக்களுக்கு உதவியுள்ளனர். தனுஷ் ரசிகர்கள் அவர்களுக்கு தக்க சமயத்தில் செய்த இந்த உதவிக்கு அந்த கிராமத்து மக்கள் மனம் உருக அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்த சில புகைப்படங்களை வெளியிட்டு, தனுஷ் ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் சேவைக்கு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.