கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்த படம் "எனை நோக்கி தோட்டா". கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வந்திடும், அந்தா வந்திடும் என எதிர்பார்க்கப்பட்ட "எனை நோக்கி பாயும் தோட்டா" படம், ஒருவழியாக இன்று ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு படம் ரிலீஸ் ஆகியிருந்தாலும் படத்திற்கான மதிப்பு குறையவில்லை, படத்தை காண தியேட்டர்களில் கூடியுள்ள ஏராளமான ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்களோடும் மாஸ் காட்டி வருகின்றனர். 

ஆக்‌ஷன் ரொமாண்டிக் படமான "எனை நோக்கி பாயும் தோட்டா" வெற்றி பெற வேண்டுமென தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் அவர், அவர் ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரையில் தனுஷ் தோன்றும் காட்சிகளை செல்போனில் படம் பிடிக்கும் ரசிகர்கள், அதனை ட்விட்டரில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சென்னையில் மட்டும்  70க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள "எனை நோக்கி பாயும் தோட்டா" படத்தை காண காலை முதலே ரசிகர்கள் பட்டாளம் காத்திருந்தது. இன்று காலை 8 மணிக்கு ரோகிணி தியேட்டருக்கு விசிட் அடித்த கெளதம் வாசுதேவ் மேனன், ரசிகர்களுடன் சேர்ந்து ஆனந்த கண்ணீருடன் படத்தை கண்டு ரசித்தார். அவரை சூழ்ந்து கொண்ட தனுஷ் ரசிகர்கள் செல்ஃபி எடுத்தும், கைகுலுக்கியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள கெளதம் வாசுதேவ் மேனனின் படம் முதல் நாளே மாஸ் காட்டி வருகிறது. இதனால் "அசுரன்" பட அளவிற்கு "எனை நோக்கி பாயும் தோட்டா" படமும் சூப்பர் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனிடையே டுவிட்டரில் #EnaiNokkiPaayumThotta, #ENPT போன்ற ஹேஷ்டேக்குகளை தனுஷ் ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.