நடிகை தீபிகா படுகோனே ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்துள்ள படம் சப்பாக். கடந்த 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேக்னா குல்சார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆசிட் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த லஷ்மி அகர்வால் என்ற தைரியமான பெண்ணின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், கடைகளில் ஆசிட் விற்பனை எப்படி உள்ளது, அது எப்படி எளிதாக அனைவருக்கும் கிடைக்கிறது என்பது குறித்து தீபிகா படுகோனே தனது படக்குழுவினருடன் சேர்ந்து ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றை நடத்தியுள்ளார். 

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் தீபிகா ஒரு காரில் கேமராவுடன் தயாராக இருக்கிறார். அந்த குழுவைச் சேர்ந்த நபர்கள் சிலர் மாணவர், தொழிலதிபர், பிளம்மர், குடிகாரர், இல்லத்தரசி என பல்வேறு கெட்டப்புக்களில் சென்று கடைகளில் ஆசிட் கேட்கின்றனர். 

எந்தவொரு சரிபார்ப்பும் இல்லாமல் கடைக்காரர்கள் ஆசிட் விற்பதை கையும் களவுமாக வீடியோ எடுத்துள்ளனர். அதில் ​​ஒரு பெண் கடைக்காரர் யாரையும் தாக்க வாங்குகிறீர்களா என்று கேட்பது  மனதை ரணமாக்குகிறது. அதில் ஒரு கடைக்காரர் மட்டுமே உரிய அடையாள சான்றிதழ் இல்லாததால் ஆசிட்டை விற்க மறுக்கிறார். அது நமக்கு சற்று ஆறுதலாக அமைகிறது. 

அந்த வீடியோவின் இறுதியில் ஆசிட் விற்பனைக்கான விதிகள் குறித்தும், சட்டவிரோதமாக ஆசிட்டை விற்க வேண்டாம் என்பது குறித்தும் கடைக்காரர்களுக்கு தீபிகா படுகோனே அறிவுறுத்தியுள்ளார். சப்பாக் படக்குழுவினர் இந்த விழிப்புணர்வு முயற்சி சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.