மெட்டா ஏஐ-யின் வாய்ஸ் அசிஸ்டன்டுக்கு இனி தீபிகா படுகோனின் குரல் தான் கேட்கும், இந்த வாய்ப்பைப் பெறும் முதல் இந்திய பிரபலம் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆவார்.
Deepika Padukone Meta AI Voice : மெட்டா ஏஐ உடன் இனி பேசும்போது நீங்கள் கேட்பது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் குரலைத்தான். மெட்டா ஏஐ-க்காக ஸ்டுடியோவில் குரல் பதிவு செய்யும் வீடியோவுடன் தீபிகா படுகோனே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 'ஹாய், நான் தீபிகா படுகோன். மெட்டா ஏஐ-யின் அடுத்த குரல் நான் தான். அதனால் என் குரலுக்காக கிளிக் செய்யுங்கள்' என்று அந்த வீடியோவில் தீபிகா கூறியுள்ளார்.
'மெட்டா ஏஐ-யின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. என் குரலில் ஆங்கிலத்தில் இந்தியா முழுவதும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மெட்டா ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்டுடன் சாட் செய்யலாம்' என்றும் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு தீபிகா படுகோன் குறிப்பிட்டுள்ளார்.
மெட்டா ஏஐ-க்கு தீபிகா படுகோனின் குரல்
மெட்டா ஏஐ-யின் வாய்ஸ் அசிஸ்டன்டில் குரல் கொடுக்க வாய்ப்பு பெற்ற முதல் இந்திய பிரபலம் தீபிகா படுகோன். ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் உட்பட இனி தீபிகா படுகோனின் குரலில் பேசலாம், உதவி கேட்கலாம். மெட்டா ஏஐ-யை மேலும் பிரபலப்படுத்தவும், தனிப்பயனாக்கவும் பிரபலமான குரல்களின் உரிமையாளர்களை வாய்ஸ் அசிஸ்டன்டில் மெட்டா இணைத்து வருகிறது. இதுவரை வேறு எந்த இந்திய நடிகைக்கும் மெட்டா ஏஐ-க்கு குரல் கொடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடிப்பு மட்டுமின்றி சமூக செயல்பாடுகளிலும் தீபிகா படுகோன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தீபிகா படுகோனை தனது முதல் மனநல தூதராக அறிவித்தது. நாட்டில் நன்கு அறியப்பட்ட 'தி லிவ் லவ் லாஃப்' (LLL) அறக்கட்டளையின் நிறுவனர் என்ற முறையிலும் தீபிகா படுகோன் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக மனநல தினத்தன்று இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொது சுகாதாரத் துறையில் மனநலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தீபிகா படுகோனை மனநல தூதராக சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது. இதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு சமூக ஊடகங்கள் மூலம் தீபிகா படுகோன் நன்றி தெரிவித்திருந்தார்.
