பல படங்களில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து, ஹீரோவாக அறிமுகமாகிய நடிகர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்றும் ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சாலோமோன் கண்ணன் இயக்கி வந்த திரைப்படம் 'திருமாயி'.  இந்த படத்தின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில்  விரைவில் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் திருப்பூர் சிவக்குமார் தயாராகி வந்தார்.  இந்த படத்தை, சாஷினி புரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக தேனி பாலா என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே பல தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தானுவிடமும் உதவியாளராக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 'திருமாயி' படத்தின் ஹீரோ தேனி பாலா கடந்த சில மாதங்களாகவே புற்றுநோய் பாதிப்பு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீர் என உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவரது உடல் நிலை மேலும் மோசமடைந்து இறந்துள்ளதாக கூறப்படுகிறது.  46 வயதான இவர், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய சொந்த பெயர் ராம்சந்த். திரைப்படத்திற்காக தேனி பாலா எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.

ஹீரோவாக நடித்த படத்தை, திரையரங்கில் பார்க்க வேண்டும் என்கிற கனவு நிறைவேறும் முன்பே , தேனி பாலா உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர், படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.