ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் அதிரடி போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ள, அந்த படத்தைக் காண அவரது ரசிகர்கள் வெறி கொண்டு காத்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

ராக் ஸ்டார் அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான "தர்பார்" படத்தின் பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றன. படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், லைகா நிறுவனம் புரோமோஷனில் தீயாக வேலை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக "தர்பார்" படத்தின் விளம்பரங்களை விமானத்தில் ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. "தர்பார்" பட போஸ்டருடன் நிற்கும் விமானத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

2020ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே ரஜினி ரசிகர்களை ஈர்க்க லைகா நிறுவனம் தீவிரமாக வேலை செய்து வருகிறது. 2016ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "கபாலி" படத்தின் போஸ்டர் ஏர் ஏசியா விமானத்தி விளம்பரம் செய்யப்பட்டது. அப்போது புரோமோஷன் கிங்கான கலைப்புலி தாணு கையில் எடுத்த அந்த யுக்தியை தற்போது லைகா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.