’நான் யானை இல்லை, ஒரு தடவை விழுந்தால் அப்படியே முடங்கிப் போறதுக்கு. நான் குதிரை! விழுந்தாலும் அப்டியே எழுந்து ஓடுவேன்...என்னா!’ சில வருடங்களுக்கு முன் ஒரு பொது மேடையில் இப்படி சவால் விட்டுப் பேசினார் ரஜினிகாந்த். இப்போது அவர் தான் குதிரைதான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. முன்பெல்லாம் ரஜினிகாந்தின் படம் ரிலீஸானால் தமிழ்நாடுதான் அமளிதுமளியாகும். பின் கர்நாடகா, ஆந்திரா என்று தென்னிந்திய மாநிலங்கள் சிலவற்றில் ஒரு பரபரப்பு,கலகலப்பு இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக ரஜினியின் மார்க்கெட்டோ தேசம் முழுக்க பரவி, அதையும் தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது. 

கபாலி படமெல்லாம் சர்வதேச அளவில் பெரும் வியாபாராமாக பேசப்பட்டது. இந்த நிலையில் லைக்கா எனும் மிக மிகப்பெரிய நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் எனும் பிராமிசிங் இயக்குநரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, நயன் தாரா எனும் கோலிவுட் அரசி ஜோடி சேர, சந்தோஷ் சிவன் கேமெராவை கையாள என்று ஹாட்டஸ்ட் காம்போவில் உருவான ‘தர்பார்’ படம் இன்று ரிலீஸாகி இருக்கிறது. ரஜினி படமென்றாலே ஓப்பனிங் பிய்ச்சு உதறும். அதிலும் அடுத்த சில மாதங்களில் அவர் அரசியல் கட்சி துவக்க இருப்பதாக பேசப்படும் நிலையில் அவரது படத்துக்கான ஓப்பனிங் எப்படியொரு தாறுமாறாக இருக்குமென்பதை யூகிக்க முடியும். இந்த படத்தின் தமிழ் ரிலீஸுக்காக ஐதராபாத்தில் புதிய பட ஷூட்டிங்கில் இருந்த ரஜினி, கிளம்பி வந்துவிட்டார். 

முருகதாஸ் தனது முந்தைய படமான ‘சர்க்கார்’ படத்தில் ஆளும் அ.தி.மு.க.வை ஏகத்துக்கும் உரசியிருந்தார். இந்நிலையில் அரசியல்வாதி அவதாரமெடுக்கும் ரஜினியை வைத்து அவர் படம் பண்ணியிருப்பதால் அரசியல் தீ பறக்கும்! என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழில் மட்டுமில்லாமல் இந்தி,  தெலுங்கு என்று இந்தியாவின் முக்கிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இன்று தர்பார் ரிலீஸானது. ஆனால் எல்லோரது எதிர்பார்ப்பையும் ஏமாற்றிவிட்டது படம்! என்கிறார்கள். ‘இது ரஜினி ரசிகர்களுக்கான படம்னு கூட சொல்ல முடியாது. அவரோட ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட மாஸ், ஸ்டைலி காட்சிகளின் தொகுப்பு! அவ்வளவே. ரஜினி ஸ்டைலில் சொல்வதென்றால்...கதையா? அப்படின்னா என்னா?ங்கிற நிலைமைதான். ஏ.ஆர்.முருகதாஸின் படமென்றால் அதில் பெரிய விஷய ஞானம் ஒளிந்திருக்கும். ஆனால் அப்படி எதுவுமில்லாத இந்தப் படம் ரஜினி மற்றும் முருகதாஸின் பயணத்தில் ஒரு சறுக்கலே!’ என்று தகவல்கள் வந்து விழுகின்றன. 

பொதுவாக ரஜினியின் படங்கள் நல்லா இருக்குதோஇல்லையோ ஆனால் ஓப்பனிங் வசூல் வெளுத்துக் கட்டும். ஆனால் தர்பாரோ அந்த விஷயத்திலும் சறுக்கியிருக்கிறது என்கிறார்கள் தமிழக திரையரங்கு ஓனர்கள். ‘ரஜினி படத்துக்கான கூட்டமா இது! ப்ச்ச்ச்...இல்லைங்க. சூப்பர் ஸ்டார் சறுக்கிட்டார்.’ என்கிறார்கள். தர்பாரின் வசூலானது டல்தான்! என்று தமிழகமெங்கும் இருந்து தகவல்கள் வருகின்றன. இது ரஜினியை அப்செட்டாக்கி உள்ளதுதான் உண்மை. 
நீங்க குதிரைதான்னு நிரூபியுங்க ரஜினி!